விபத்துக்குள்ளாகி உயிரிழந்த விவசாயியின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட நிலையில், அவர் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருகண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் உமாசந்திரன் (62). ஒரு வருடத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிளில் செல்லும்போது, விபத்தில் தலைக்காயம் ஏற்பட்டதால் அடிக்கடி தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகளில் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் மரணம் நெருங்கி வருவதை முன்னரே தீர்மானித்து இருந்த உமாசந்திரன், இறந்த பின்னரும் நாம் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு பதிவு செய்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உமாசந்திரன், உயிரிழக்கவே அவரது முக்கிய உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்ட பின்னர் , உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப் பட்டது. இதையடுத்து அவரது உடலுக்கு அரசு சார்பில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். வட்டாட்சியர் வசந்தி, போலீஸ் டி.எஸ்.பி. கணேஷ் குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
பொன்.கோ.முத்து