அகத்தியர் உழுத பொன் ஏர்! ’படிதாண்டா பத்தினி’ கோயில்…

அகத்திய முனிவர் உழுத பொன் ஏர், பார்வதி தேவி நீராடிய திருக்குளம்,
வற்றாத புனித நீர், சிவபெருமான் ஆட்கொண்ட அற்புததலம், சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சிவபுராணத்தில் சிவபெருமானுக்கும் பர்வத ராஜனான இமையவனுடைய பெண் உமையவளுக்கும் (சிவபெருமானுக்கும்) வடக்கே திருமணம் நடைபெறுவதைக்
காண அகத்திய மாமுனி உள்ளிட்ட ரிஷிகளும் பல லோகத்து தேவர்களும்
வடக்கே உள்ள பனிமலை நோக்கி சென்றனர். இதனால் வடபகுதி சாய்ந்தும், தென்பகுதி உயர்ந்தும் போயிற்று. இதை சமநிலைக்குக் கொண்டு வரச்செய்ய திருஉளம் கொண்ட சிவபெருமான் கும்பத்தில் தோன்றிய அகத்திய மாமுனிவரை தெற்கேயுள்ள பொதிகை மலை
சென்று அமரக் கட்டளையிட்டார். சிவனது ஆணையை சிரம் தாங்கி ஏற்றுக்கொண்டு அகத்தியரும் தெற்கே நோக்கி வர பூமி சமப்பட்டது. அப்போது அகத்தியர் பூஜை செய்த சிவலிங்கம் அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயரில் விளங்கப்பெற்றது. அந்தத் திருக்கோயில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், சிவபுராணத்தில் பெருஞ் சிறப்பு பெற்றது.

சோழ மன்னன் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயரில் இங்கே ஆலயம் எழுப்பி உள்ளார். சிவபுராண காலத்தில் இத்தலம் புதர்க் காடுகளால் சூழப்பட்டிருந்தது. தெற்கே ஒரு தவம் மேற்கொள்வதற்காக அகத்தியரும்
தென் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளுக்கு விஜயம் செய்கையில்,
வில்வ மரங்களால் சூழப்பட்ட ஒரு அமைதியான இடத்தில் தங்கியபோது
அவருக்கு பல நல்ல சகுனங்கள் (காட்சிகள்0 தோன்றின. பின்னர், அகத்தியமாமுனி அங்கேயே தங்கி தன்னுடைய தவத்தை மேற்கொள்ள முடிவு செய்தாராம். அந்த இடம்தான் நான் மறையோதும் வேதியர் வாழ்ந்த சதுர்வேதி மங்கலத்திற்கு தென் மேற்காகவும், பஞ்சேஷ்டி என்ற திவ்ய சேஷத்திரத்திற்கு வட மேற்காகவும்,
திருவேற்காடு எனும் பகுதிக்கு வடகிழக்காகவும், ஸ்ரீ காளஹஸ்திக்கு தென் கிழக்காகவும் அமைந்த ஊரானகும்பமுனி மங்கலமாகும்.

சென்னைக்கு அருகே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் பொன்னேரி என்ற பெயரில் அந்தத் திருவூர் இப்பொழுது விளங்குகிறது.

ஆலயம் தோன்றிய வரலாறு:
புராண கால முனிவர்களில் தலைசிறந்தவர் அகத்திய முனிவர். இவர் தன்னுடைய தவ வலிமையால் தனக்கென்று ஒரு தனி பொன் ஏற் (ஏறு) றையே படைத்தவர். இதன் காரணமாக முற்காலத்தில் பொன் ஏர் என்று இப்பகுதி அழைக்கப்பட்டது.இன்னும் இந்த ஆலய கருவறை பின்புறம் ஏற் சிற்பத்தை காணலாம். ஒரு முறை சிவபெருமான் கைலாயத்தில் தவம் புரிந்துகொண்டிருக்கும் பொழுது, அங்கு வந்த உமையவள் ஆனந்தத்தில் சிவபெருமானின் மீது பனித்துளிகளை அள்ளித் தெளிக்கிறாள். அப்பொழுது தீ பிழம்பாக கோபம் கொண்ட சிவபெருமான் தன்னுடைய தவம் கலையக் காரணமாய் இருந்த உமையவளுக்கு சாபம் இடுகிறார்.
நீ உன்னுடைய ஆனந்தத்தால் என்னுடைய தவம் கலையக் காரணமாய் இருந்துவிட்டாய்.
நீ உன்னுடைய ஆனந்தத்தை இழந்து மானிட வடிவம் எடுத்து அல்லல் படுவாய் என்பதே சிவபெருமான் இட்ட சாபம். சிவபெருமான சாபம் காரணமாக உமையவளும் மானிட வடிவமாக மங்களபுரத்தில்
தோன்றி இன்னல்கள், துன்பங்களுக்கு ஆளாகி வேதனையில் வாடுகிறாள்.
அப்பொழுது அங்கு வரும் நாரத முனிவர் உமையவளின் வேதனையைக் கண்டு உள்ளம் பதறுகிறார்.
நாரதரின் ஆலோசனைப்படி அகத்திய முனிவரை சந்தித்து, தனக்கு ஏற்பட்ட சாபம் விலகிட விடை கேட்கிறாள். அகத்திய முனிவரும் தனது தவ வலிமை ஞானத்தால் உமையவளுக்கு ஏற்பட்ட சாபத்தை புரிந்து கொண்டு நடந்த விபரத்தை சொன்னார். நீங்கள் சிவபெருமானின் தவம் கலையக்
காரணமாய் இருந்ததால் ஏற்பட்ட தோஷம் இது. இந்த தோஷம் நீங்க வேண்டுமென்றால், கும்பத்தில் சிவனை நோக்கி தவம் இருக்கும் முனிவர்களுக்கும், தேவர்களுக்கும், அடியார்களுக்கும், அத்தனை உயிரினங்களுக்கும் நீங்கள் தாமரை குளத்தில் புனித நீராடி, 11 (பதினொரு) அமாவாசைகள் சிவபெருமானை வேண்டி விரதமிருந்து, அன்னதானம் செய்து, சிவலிங்க பூஜை செய்து வந்தால் உங்கள் வேதனை நீங்கி ஆனந்தம் பிறக்கும். சிவபெருமானின் கோபத்தீயும் அணைந்து போகும் என்கிறார்.
உமையவளும் அகத்திய முனிவரின் ஆலோசனையை ஏற்று சிவலிங்க பூஜை செய்கிறாள். அப்பொழுது உமையவளின் பூஜையில் மனம் இறங்கிய சிவபெருமான் ஆனந்தத்தில் உமையவளுக்கு அருள் பாலிக்கிறார்.
சிவபெருமானின் அருளால் சாபம் நீங்கி உமையவள் பேரானந்தம் பெறுகையில் உள்ளம் மகிழ்கிறாள்.
அம்பாள் சிவனது சாபத்தால் மானிட வடிவம் பெற்று, மீண்டும் தன் சுய உருவம் பெற்றது இத்தலத்தில் தான்.
கோவிலுக்கு முன்னால் திருக்குளம் உள்ளது. இத் தீர்த்தத்திலிருந்த சுவாமி அம்பாளை அணைத்தெழுந்த கோலமாக எழுந்தருளியதால் இத்தீர்த்தத்திற்கு ஆனந்த புஷ்கரணி என்ற பெயர் பெற்றது. இந்த திருக்குளத்தில் இதுவரையில் நீர் வற்றியதேயில்லை என்பது மற்றொரு சிறப்பு.


சித்திரை மாத நாட்களில் இந்த ஆலயத்தில் ஒரு அதிசயத்தைக் காணலாம். சூரிய உதயத்தின் போது
சூரிய கிரகணங்கள் இராஜ கோபுர வாயிலிலிருந்து செங்கதிர்கள், கருவறையில் உள்ள இறைவனின்
திருமேனி மீது விழுவது கண் கொள்ளாக் காட்சியாகும். சக்தி உமையவளின் உள்ளத்தில் தலைவனை என்றும் தியானிப்பதால் அகத்தீஸ்வரன் என்ற திருப்பெயர் தாங்கியுள்ளார். அகத்தியரும் வழிபட்டமையால் அகத்தீஸ்வரர் என்ற திருப்பெயர் மேலும் பெருமையைத் தேடி தருகிறது. இங்கு சிவனுக்கு உமையவள் பூஜை செய்ததால் சிவசக்தி பூஜை ஒவ்வொரு அமாவாசை அன்றும் நடைபெறுகிறது. சிவசக்தி பூஜை செய்து வந்தால் சர்ப்ப தோஷம் நீங்கி சந்தோஷம் பிறக்கும். அகத்திய முனிவர் ஏதேனும் ஒரு உருவில்
இந்த பூஜையில் கலந்து கொள்கிறார் என்ற நம்பிக்கை இங்குள்ள பக்தர்களிடையே இன்றும் நிலவுகிறது.


ஆலயத்தின் அமைப்பு. ராஜகோபுரம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. அது ஐந்து கலசங்கள் கொண்டதாக பக்திப்
பொலிவுடன் விளங்குகின்றது. கலை வண்ணங்கள் கோபுரத்தில் பளிச்சிடுகின்றன. ஆரண்ய நதிக்கும்
திருக்குளத்திற்கும் இடைப்பட்டது புண்யாரண்ய ஷேத்திரமாகும். முன் வாயிலின் சற்றே தொலைவில்
ஆனந்த புஷ்கரணி தீர்த்தம் (இது அக்கினி தீர்த்தம்) அமைந்துள்ளது. குளத்திற்கும் கோபுரத்திற்கும் முன்னே பதினாறுகால் மண்டபம் அமைந்துள்ளது. மண்டபத்தின் இடக்கைப் பக்கம் ஆஞ்சநேயர் தேவஸ்தானம் உள்ளது. வலக்கைப் பக்கம் திருக்குளம் உள்ளது. கோயிலுக்கு இருபிரகாரங்கள் உண்டு.
கோயிலுக்கும், கோயில் மதில்களுக்கும் இடையே முதலாவதாக வெளிப்பிரகாரம் உள்ளது. இது திறந்த வெளியில் உள்ள பிரகாரம். கோயிலுக்குள் மூலவர், ஸ்ரீ அகத்தீஸ்வரர் பெருமாளைச்
சுற்றியுள்ளதாக இரண்டாவதாக உட்பிரகாரம் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்தில் விநாயகர் சந்நதி உள்ளது.
இராஜகோபுரம் வாயிலின் வழியே உள்ளே நுழைந்ததும், துவஜஸ்தம்பம், பலிபீடம், நந்தி தேவர் சந்ததியை
முன்பக்கம் காணலாம். இடக்கைப் பக்கம் நவக்கிரக சந்நதி வலக்கைப் பக்கம் வாகன மண்டபம் உள்ளது.
தொடர்ந்து சென்றால், அதனையடுத்து மண்டபமும், ஸ்ரீ அகத்தீஸ்வரரின் லிங்கோத்பவ காட்சி எழிலோடு
அமைந்திருக்கிறது. மூலவர் சன்னதியின் வலதுபுறம் ஆனந்த வல்லி தாயார் சந்நதி உள்ளது.
இவரை படிதாண்டாப் பத்தினி என்றும் அழைப்பர். நின்ற திருக்கோலத்தில் அம்பிகை புன்முறுவல் பூத்தபடி அருள் பாலிக்கிறாள். இடப்பக்கத்தில் நடராஜர் சந்நதி உள்ளது. வலக்கைப் பக்கம் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் உள்ளிட்ட மூர்த்திகள் சந்நதி கொண்டுள்ளனர். மூலவருக்குப் பின்புறத்தில்
விநாயகர், வீரபத்திரர், முருகன், வள்ளி, தேவயானை, சிவகாமி, துர்க்கை, பைரவர், சூரியமூர்த்தி உள்ளனர்.
இவ்வாலயம் கிழக்கு நோக்கி உள்ளது. மூலவரான சுயம்புலிங்கம் அபூர்வ சக்தி படைத்தது. வேண்டிய வரம் அருளும் வல்லவர் பொன்னேரி அகத்தீஸ்வரர்.
சரி ! எப்படிச் செல்வது என்றுதானே கேட்கிறீர்கள் ? சென்னை சென்ட்ரல் புறநகர்ரெயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் ரெயில் தடத்தில் பொன்னேரி என்ற இடத்தில் இறங்கினால், அங்கிருந்து பத்துஅடி தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம்.
சென்னை கோயம்பேட்டில் இருந்தும் பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். அழகான மூர்த்தி, அபூர்வமான தலம், பொன்னேரி அகத்தீஸ்வரரைத் தரிசித்தால்
இந்த உண்மை தெள்ளத்தெளிவாய்ப் புலப்படும்.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *