அதிமுக கலவரம் ! சில துளிகள்.

அதிமுக பொதுக்குழு, வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் 11.07.2022 காலை கூடியது. முன்னதாக எடப்பாடி கே பழனிசாமி அதிமுக தலைமை கழகத்துக்கு காலை 7 மணிக்கு வந்து விட்டு அதன் பின்னரே பொதுக்குழு செல்வார் என்று சொல்லப்பட்டது. ’எடப்பாடி’ வருகை காரணமாக ஆதி.ராஜாராம், விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா (எ) சத்யநாராயணன், கே.பி.கந்தன் ஆகிய நான்கு மாவட்டச் செயலாளர்கள், அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டை டாக்டர் எம்ஜிஆர் மாளிகைக்கு 7 மணிக்கு முன்னதாக வந்துவிட்டனர்.

இதற்கிடையே நேரமின்மை காரணமாக நேரடியாக அனைவரும் பொதுக்குழுவுக்கு வந்துவிடும்படி, ‘எடப்பாடி’ தரப்பிலிருந்து தகவல் வரவே, அங்கிருந்து கிளம்பி பொதுக்குழுவுக்கு செல்ல, ’எடப்பாடி’ ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் நால்வரும் புறப்பட எத்தனித்த அந்த நிமிடங்களில்தான், ராயப்பேட்டை போர்க்களம் போல் ஆகியிருக்கிறது

காலை எட்டேமுக்கால் மணி. ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புடைசூழ, அதிமுக தலைமைக் கழகத்துக்கு வருகை தந்தார். தலைமை கழகத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் ஓ.பி.எஸ். கார் நெருங்கிய வேளை கற்கள் பறந்தன. ட்ரை சைக்கிள் மற்றும் மீன்பாடி ரிக்‌ஷாக்களில் சரளைக்கற்களை அடுக்கி வைத்தபடி சாவகாசமாக வந்த கும்பல், கற்களால் தாக்குதலை ஆரம்பித்து வைத்துள்ளனர். அடிபடாமல் ஆதி.ராஜாராம், தி.நகர் சத்யா, கே.பி.கந்தன், விருகைரவி அங்கிருந்து தப்பிக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. அனைவருக்கு சட்டை கிழிப்பு, லேசான காயங்கள் என்றாலும், கே.பி.கந்தனுக்கும் அவர் மகன் கேபிகே சதீஷ்குமாருக்கும் பலத்த அடி.

தாக்குதலை முறியடிக்க எதிர்த்தாக்குதலை நடத்தி, தப்பிக்க நினைத்த வகையில் விருகை வி.என்.ரவி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளதாக சொல்கிறார்கள். கே.பி.கந்தனுக்கும் அவர் மகன் கேபிகே சதீஷ்குமாருக்கும் பலத்த அடி என்றாலும், தலைமை கழகத்தில் நுழைந்த கும்பலை தடுக்கும் முயற்சியில், தொடர் தாக்குதலை நிமிடக்கணக்கில் எதிர்கொண்டதால், மயக்கமடைந்து கீழே விழுந்திருக்கிறார் கேபிகந்தன். தி.நகர் சத்யாவும், ஆதி. ராஜாராமும் அவர்களை அலேக்காக தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக காரில் ஏற்றியிருக்கிறார்கள். அந்த கார், கிருஷ்ண மூர்த்தியின் கார். அதைத் தொடர்ந்து, இ.பி.எஸ். ஆதரவாளரான 181 ஆவது வட்டச் செயலாளர், கிருஷ்ணமூர்த்தியின் கார், நொறுக்கப்பட்டது.

மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் அருண் தோள்பட்டையில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து விழுந்த கற்கள், எலும்பை முறித்து விட்டதால், மருத்துவ சிகிச்சைக்கு உடனே கொண்டு போகப்பட்டிருக்கிறார். அருணுக்கு அடுத்த ‘பெட்’ டில், கே.பி.கந்தனும் அவர் மகன் கேபிகே சதீஷ்குமாரும் அனுமதிக்கப்பட்டனர்.

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில், ‘கலவரம் ஏற்படுத்தியது அவர்கள்தான்’ என்று மாறி மாறி புகார் அளித்ததன் பேரில், சென்னை ராயப்பேட்டை போலீசார், 400 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 400 பேரில் எத்தனை பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், எத்தனை பேர் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முழுமையான விபரம் இன்னும் வெளியாகவில்லை.

ஓ.பி.எஸ். உள்ளிட்ட கூடாரத்தை ஒட்டு மொத்தமாக கட்சியை விட்டு நீக்குவதாக இபிஎஸ் தரப்பும், இபிஎஸ் உள்ளிட்ட கூடாரத்தை ஒட்டு மொத்தமாக கட்சியை விட்டு நீக்குவதாக ஓ.பி.எஸ். தரப்பும் களேபரங்களுக்குப் பின்னர் திருவாய் மலர்ந்துள்ளனர். இவர்கள் இருவரையும் கட்சியை விட்டு நீக்கி வைப்பதாக வி.என்.சசிகலா தெரிவித்துள்ளதாக ’ஜெயா நியூஸ்’ செய்தியில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என்பதையும் சொல்லவேண்டியிருக்கிறது.
-பிரீத்தி எஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *