பொன்னேரியில் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன், “ஓபிஎஸ் தரப்பினர் எத்தனை முறை மேல் முறையீடு சென்றாலும் எடப்பாடியே வெற்றி பெறுவார். எந்த வழக்கிலும் ஓபிஎஸ் மேல் முறையீட்டில் வெற்றி பெறவில்லை” என பேட்டியளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது, இதில் முன்னாள் அமைச்சரும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், “எங்களுக்கு, 94% பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. மற்றும் பல்வேறு ஆதாரங்கள் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்துள்ளது. ஓபிஎஸ் தரப்பினர் மேல் முறையீடு சென்றாலும், அதில் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெறுவார், மேல் முறையீடு சென்ற எந்த வழக்கிலும், ஓபிஎஸ் வெற்றி பெறவில்லை. தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மட்டுமல்ல, யார் முறையிட்டாலும், கடந்த காலத்தை போல தோற்று விடுவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என புகழேந்தி மிதக்கிறார். பாஜக – அதிமுக இடையே உள்ள கள்ள உறவு என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். வாஜ்பாய் காலத்தில் திமுக, பாஜகவுடன் கள்ள உறவு வைத்து காதலித்து திருமணம் செய்து பணம் கொழிக்கும் துறைகளை பெற்றது போல, தற்போது புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்தில் 30000கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், திமுக தற்போது பாஜகவுடன் கள்ள உறவு வைத்து கொண்டு முடிந்தால் திருமணம் செய்து கொள்ள துடிக்கிறது. தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பாகதான் கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவிக்க முடியும், நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்த அற்புத நிர்வாகி எடப்பாடி பழனிசாமி பிரதமராக வேண்டும் என்ற நிலையில் இந்தியா இருக்கிறது. அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பது போல, ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால் உண்மையாகி விடும் என்ற தத்துவத்தை கருணாநிதி கடைபிடித்ததார், அதையே அவரது, மகன் ஸ்டாலின் கடைபிடிக்கிறார்.
ஆட்சிக்கு வந்ததும், முதல் கையெழுத்து நீட் ஒழிப்பு என தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி, சூழ்ச்சி செய்து நீட் தேர்வுக்கு எதிராக திமுகவினர் வாங்கும் கையெழுத்து, சட்டப்படி செல்லாது.கோபாலபுரம் குடும்பம் 30000 கோடி ரூபாய் கொள்ளை தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனே வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உட்டுத்தப்பட்டுள்ள நிலையில் எ.வ.வேலு மீதான நடவடிக்கை குறைவானதே. ரூபாய் 30, ஆயிரம் கோடி கொள்ளை, நில மோசடி என பல்வேறு ஆதாரங்கள் ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில் திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்வார்கள், எடப்பாடி பழனிசாமி ஆட்சி கட்டிலில் மீண்டும் அமர்வார்” என பொன்னையன் தெரிவித்தார்.
பொன்.கோ.முத்து