தொண்டர்கள் யார்பக்கம் ! அதிமுகவின் லீடர் இவரா ?

நியூஸ் ஜெ. தொலைக்காட்சியைத் தவிர, டிபேட் நடத்தக்கூடிய நாட்டிலுள்ள அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் நான்கைந்து நாளாக நடக்கும் முக்கிய டிபேட் ஆக மாறியிருப்பது அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் விவகாரம் !
காலஞ்சென்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள் டாக்டர் எம்ஜிஆர் உருவாக்கி, டாக்டர் ஜெ.ஜெயலலிதாவால் நிலை நிறுத்தப்பட்ட கட்சி அதிமுக. தமிழ்நாட்டில் மூன்றுமுறை முதலமைச்சர் தகுதியுடன் வாழ்ந்து மறைந்தவர் எம்ஜிஆர். இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்று பாராளுமன்றத்தில் கட்சியை தூக்கி நிறுத்தியவர் ஜெயலலிதா. இருவருமே இப்போது இல்லை. இருவருமே தங்களின் சொத்துகளுக்கும், அரசியலுக்கும் நேரடி எதிர்கால வாரிசுகளை உருவாக்கிச் செல்லவில்லை.

எம்ஜிஆரைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்தார், ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவை ஒதுக்கினார். வலிமையுள்ளது எப்போதுமே ஜெயிக்கும் என்கிற தத்துவவியல் கோட்பாட்டின்படி எம்ஜிஆருக்குப் பின், வலிமை என்ற ஒன்றை மட்டுமே கைக்கொண்டு ஜெயலலிதா கட்சியைக் கைப்பற்றினார். எம்ஜிஆரால் ஒதுக்கப்பட்டவர் என்று தொண்டர்கள் யாரும் ஜெயலலிதாவைப் புறக்கணிக்கவில்லை, ஏற்றுக் கொண்டனர். கட்சியும், கட்சியின் சின்னமும்தான் பிரதானம் என்பதே, ஒட்டுமொத்த தொண்டர்களின் உள்ளக்கிடக்கை !

எம்ஜிஆர் மறைவுக்குப் பின், அவரின் மனைவி வி.என்.ஜானகியை அப்போது இருந்த கட்சியின் சீனியர்கள் அரசியலில் நுழைத்தனர். கட்டாயத்தின் பேரில் அரசியலில் நுழைந்து, கட்டாயத்தின் பேரில் 28 நாட்கள் முதலமைச்சராக பொறுப்பிலும் இருந்து பார்த்து விட்டு, ‘ஜெயலலிதாவுக்குத்தான் அரசியல் சரியாய் வரும்’ என்று ஒதுங்கிக் கொண்டார். வி.என்.ஜானகியோடு அமைச்சரவையில் இடம் பிடித்த பலர், ஜெயலலிதாவோடு கைகோக்க விரும்பாமல் அரசியலை விட்டு ஒதுங்கிக் கொண்டனர். பலர் தொழிலதிபர் ஆகினர். பலர் கல்வித்தந்தை ஆகினர். பலர் திமுக போன்ற மாற்றுக்கட்சி அரசியலில் பயணத்தை தகவமைத்துக் கொண்டனர். கொஞ்சம் சீனியர்கள் மட்டும் ஜெயலலிதாவோடு துணை நின்றனர். 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் தலைமையிலான அதிமுக கோட்டையைப் பிடித்தது. ஐந்து பிளஸ் ஒன்று (ஆறுமுறை) என்ற கணக்கில் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து விட்டு மறைந்து போனார்.

எம்ஜிஆருக்கு பிடித்தமான இரண்டாம்கட்டத் தலைவராக இருந்து பின்னால் அவராலே ஒதுக்கப்பட்டும் கட்சி -ஆட்சி இரண்டையும் தன் வசப்படுத்தியவர் ஜெயலலிதா. எம்ஜிஆரைப் போன்றே ஜெயலலிதாவுக்கும் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தவர் வி.என்.சசிகலா. தொண்டர்கள், ஜெயலலிதாவை அம்மா என்றும், சசிகலாவை சின்னம்மா என்றும் அழைக்கும் அளவுக்கு அந்த நட்புறவு வலிமையாக இருந்தது. எம்ஜிஆரால் சில காலம் ஒதுக்கி வைக்கப்பட்டது போல் சசிகலாவும் சில காலம் ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப் பட்டார்.
ஜெயலலிதாவுக்குப் பின், சசிகலாதான் கட்சிக்கும் ஆட்சிக்கும் என்ற நிலை உருவானது. கூவத்தூர் கதைகளெல்லாம் இதன்பின்னர்தான் நடந்தது. அடுத்தடுத்த காய் நகர்த்தலில் சசிகலா சிறைக்குப் போனார். அதிமுக எடப்பாடி பழனிசாமி கைக்குப் போனது. சில மாத இடைவெளியில், வெளியில் இருந்த ஓ. பன்னீர் செல்வம், மீண்டும் கட்சிக்குள் வந்தார். கட்சி இருப்பது ’இருவர்’ கைகளில் என்றதும், தொண்டர்கள், ‘இருவர்’ பக்கம் நின்றனர். சிறையிலும், பொதுவாழ்விலும் சசிகலா தனிமைப் படுத்தப் பட்டார். இன்னொரு பக்கம், ’எப்போதும் நாங்கள் சின்னம்மா சசிகலா பக்கம்தான்’ என்று அவர் பக்கமும் தொண்டர்கள் இருந்தனர் – இருக்கின்றனர்.

ஈ.பி.எஸ். முதலமைச்சர், ஓ.பி.எஸ். துணை முதலமைச்சர் – ஓ.பி.எஸ். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், ஈ.பி.எஸ். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் உருவானது. தேர்தல் ஆணையத்தில் அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது. முடிவுகள் எதை எடுப்பது என்றாலும், ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்தேதான் எடுக்கமுடியும் என்பது போன்ற சட்ட திட்டம் கட்சி ‘பை -லா’வில் உருவாக்கப்பட்டது.
அதிமுகவை சசிகலா மீட்பாரா – மாட்டாரா என்ற கேள்விக்கே விடை கிடைக்காத நிலையில்தான் சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன், ’அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ கண்டார். தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வும் ஆனார். டிடிவி தினகரனின் அ.ம.மு.க., சசிகலாவின் பயணப்பாதைக்கு பலமா – பலவீனமா என்பதும் விவாதத்துக்குரிய ஒன்று !

முந்தைய தரவுகள் சிலவற்றை சொல்லிச் செல்வது சிறப்பாக இருக்கும் என்பதால்தான் இதையெல்லாம் சொல்லவேண்டியிருந்தது. இப்போது கட்டுரையின் தொடக்க நிலைக்கு வருவோம் !
அதிமுகவின் கட்சி மாவட்டச்செயலாளர்கள் 75 பேர். அவர்களில் 64 பேர் ஈபிஎஸ் ஆதரவாளர்கள். 11 பேர் ஓபிஎஸ் ஆதரவு நிலையில் இருப்பவர்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமிக்குத்தான் முழுமையான வெற்றி கிடைக்கும் என்றே வைத்துக் கொள்வோம். (ஊடக செய்திக்காட்சிகளில், ’பெரும்பான்மை ஆதரவு எடப்பாடிக்குத்தான்’ என்றே காட்சிகளும் – செய்திகளும் இருக்கிறது.)
கட்சியின் ஓருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு இப்படிப்பட்ட ஆதரவு எதுவுமே இல்லை என்று(ம்) வைத்துக் கொள்வோம். எளிதில் வெற்றி எடப்பாடி பழனிசாமிக்குத்தானே ? என்று கேட்கலாம், இதை அப்படி பார்க்க முடியாது. இரண்டாயிரம் பேருக்கு மேல் அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களின் வாக்கு யாருக்கு போகப் போகிறது என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கட்டுப்பாட்டில்தான் அந்தந்த மாவட்டங்களில் இருக்கிற பொதுக்குழு உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும் கணித்து அறுதியிட்டு(ம்) கூறிவிட முடியாது. ‘ஸ்லீப்பர் -செல்’ போல செயல்படக் கூடியவர்களும் உண்டு என்பதைப் பேசாமல் எளிதில் கடந்து போய் விடக்கூடாது.
எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சிக்கு யார் தலைமை என்பதை வாக்களிக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே இறுதி செய்ய முடியும், அது ஒன்றே தேர்தல் ஆணையத்தில் இறுதி செய்யப்படும் – எம்ஜிஆர் கட்சியைத் தொடங்கிய காலத்தில் இருந்தே அதிமுக ‘பை லா’ ‘பொதுக்குழு உறுப்பினர்கள்’ முடிவே இறுதியானது என்று வடிவமைக்கப் பட்டிருக்கிறது.. நிலவரம் இப்படியிருக்க கட்சி அலுவலகமான ’எம்ஜிஆர் மாளிகை’ யில் கோஷம் போடுவது, மண்டைகளை உடைத்துக் கொள்வதெல்லாம், யாருக்கு வெற்றி என்ற கேள்விக்கு விடையாக ஒருபோதும் அமைந்துவிடாது.

இந்தியாவின் முன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்து, ஜெயலலிதா இருந்த கடைசி காலத்தில் இருந்தது – ஜெயலலிதாவோடு அந்த அந்தஸ்தும் இறந்தது. மீண்டும் அதே அந்தஸ்து அந்தக் கட்சிக்குக் கிடைக்குமா என்பதை காலம்தான் சொல்லவேண்டும் !
ந.பா.சேதுராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *