கே.பி. முனுசாமி – சி.வி.சண்முகம் மோதலா ? பொதுக்குழுவில் என்ன நடந்தது ?

அதிமுகவின் பொதுக்குழு, ஜூலை 11 -2022 -நாளன்று, சென்னை வானகரம் -ஸ்ரீவாரி மண்டபத்தில் நடந்தபோது கே.பி.முனுசாமியும், சி.வி.சண்முகமும் மோதிக் கொண்டதாக தகவல் வெளியானது. அதற்கேற்றது போல், சி.வி. சண்முகம், கையை நீட்டி முழக்கி ஆவேசம் காட்டுவது போன்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானது. வழக்கம் போல, அதே காட்சிகள், காட்சி ஊடகங்களில் காட்சியாகவும், அச்சு ஊடகங்களில் செய்தியாகவும் வந்தது !
நியூஸ் ஜெ தொலைக்காட்சி மற்றும் டாக்டர் நமது அம்மா பத்திரிகையைச் சார்ந்தோர் மட்டும்தான், பொதுக்குழுவின் போது உள்ளே இருந்திருப்பார்கள் எனும் போது, அவர்கள் இந்தக் காட்சியை வெளியில் ‘லீக்’ செய்து, ஒருபோதும் பிழைப்பை கெடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை.

பொதுக்குழுவில் 100 சதவீத இபிஎஸ் ஆதரவு ஆட்களே இருப்பார்கள் என்பதும் உறுதி இல்லாத நிலையில், யாரோ ஒருசிலர் இந்தக் காட்சியை லீக் செய்திருக்கலாம் ! இன்னொரு பக்கம், ஜாமர் கருவி வைத்திருந்ததாகவும் சொல்கிறார்கள்.
சரி, என்னதான் நடந்தது ?
விசாரித்தேன் !

“அன்னிக்கு பொதுக்குழு தொடங்குன கொஞ்ச நேரத்துல டாக்டர் மைத்ரேயன், பரபரக்க மேடையை நோக்கிப் போனாரு. அவர் கையில் இருந்த செல்போனை, நத்தம் விஸ்வநாதனிடம் காட்டியதும், அவர் முகம் இறுகிவிட்டது. செல்போனில் ஓடிய காட்சியில், அதிமுக தலைமைக் கழகத்தில், ஜெ.ஜெயலலிதாவின் தனி அறையை கடப்பாரை வைத்து உடைக்கும் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. பதற்றத்தில் மேசையை ஓங்கித் தட்டியபடி, ‘முனுசாமியண்ணே, இந்த அக்கிரமத்தைப் பாருங்க’ என்றபடி, மைத்ரேயன் வைத்திருந்த செல்போனைப் பிடுங்கி, அவரிடம் காட்டினார்.
செல்போனில் ஓடிய காட்சிகளைப் பார்த்ததும், நத்தம் விஸ்வநாதனை விட, கே.பி.முனுசாமி இன்னும் கோபத்தின் உச்சத்துக்குப் போய் விட்டார்.


அருகில் அமர்ந்திருந்த எடப்பாடி கே பழனிசாமியிடம், செல்போன் காட்சிகளை காட்டி, ‘அம்மா உயிரோடு இருந்தவரை, அவருடைய அறைக்கு பக்கத்தில் கூட யாரும் போய் நின்றது கிடையாது, அம்மா இறந்த பிறகு அந்த அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி வைக்க மட்டும் ஆட்கள் போவார்கள், அதுவும் சில நிமிடநேரம்தான், உடனே அறையை பூட்டி விடுவோம், அம்மாவுக்கான மரியாதை அது. நம்முடைய உயரத்துக்கு காரணமான கோயிலையே இடித்துத் தள்ளுகிறார்கள் என்றால் அந்தப்பாவிகளை விடக்கூடாது, உடனே அவர்களை கட்சியை விட்டு நீக்கி பொதுக்குழுவில் அறிவித்து விடுங்கள்’ என்று பெருங்குரலில் சொன்னார்.

எப்போதுமே டென்சன் மோடில் இருக்கும் சி.வி.சண்முகம், அன்று மட்டும் நிதானத்தை அநியாயத்துக்கு கடைபிடித்தார். ‘நல்லகாரியம் நடக்குது, கோர்ட் தீர்ப்பு நமக்கு நல்லபடியா அமைஞ்சிருக்கு, எல்லாம் நல்லபடியா முடியட்டும், பிறகு நீக்குவது பற்றி பேசி முடிவெடுக்கலாம், பொதுக்குழுவுக்கு வந்திருக்கும் உறுப்பினர்களுக்கு வெளியில் நடந்துள்ளது தெரியவந்தால் வேதனைப்படுவார்கள், சிலர் கோபத்தில் இங்கிருந்து கிளம்பிப்போனாலும் போய்விடுவார்கள், கோர்ட் நமக்குக் கொடுத்த நல்வாய்ப்பை நாமே கெடுத்துக் கொள்ளவேண்டாம்’ என்று சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, எப்போதும் இல்லாதவகையில் மிகவும் அமைதியாகவே பேசினார்.
இந்தமுறை, சி.வி.சண்முகத்தின் அத்தனை குவாலிட்டியும், கே.பி.முனுசாமிக்கு இடம் மாறிப்போனதுதான் எங்களுக்கெல்லாம் ஆச்சர்யம். ‘அம்மாவோட அறையை உடைச்சுப் போடுறாங்கன்னா, இன்னும் அவங்களை கட்சியில வெச்சுக்கிட்டு அழகு பார்க்குறதுதான் கட்சிக்கு நாம செய்யற மரியாதையா?’ என்று ஆவேசப்பட்டார்.

‘உங்களுக்கு சொன்னாப்புரியாதா, உக்காருங்க அமைதியா… எல்லாத்தையும் அப்புறம் பாத்துக்கலாம்ன்னு நானே சொல்லிட்டிருக்கேன்னா… எல்லாரும் சேர்ந்து தேவையில்லாம என்னை கோபப்பட வெச்சிராதீங்க… உக்காருங்கன்னா உக்காருங்க… உக்காருங்கான்னா உக்காருங்க’ என்று திரும்பத் திரும்ப விரலைக் காட்டி எச்சரிப்பது போல், சி.வி.சண்முகம் சத்தமாகப் பேசினார்.
கடைசியில், கே.பி.முனுசாமியும், சி.வி.சண்முகமும் மோதிக் கொண்டார்கள் என்ற செய்திதான் பரவலாகப் பரவிப் போய்விட்டது.” -என்றனர், என்னிடம் பேசியவர்கள்… ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *