
சென்னை நீலாங்கரை பகுதியில் நடிகர் விஜய் செய்திருந்த கல்வித் திருவிழா நாடு முழுவதும் பேசப்படும் விழாவாக ஆகியிருக்கிறது. 10 மற்றும் 12- ம் வகுப்புகளில் முதல் மூன்று இடத்திற்கான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு பத்திரமும், உதவித் தொகையும் என தொகுதிக்கு மூவர் என்ற கணக்கில் மாணவர்களை 234 தொகுதிகளிலும் இருந்து கொண்டு வந்து நிறுத்தியது மிக சிறப்பு. விழாவில், 600/600 மதிப்பெண் பெற்றிருந்த மாணவி நந்தினிக்கு பாராட்டு பத்திரத்தோடு வைர நெக்லஸ் வழங்கி பாராட்டினார் நடிகர் விஜய். ஐயாயிரம் மாணவர்களை ஒரே இடத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தியும் விழாவில் சிறு சலசலப்பும் நிகழவில்லை. எல்லாவற்றுக்கும் மொத்தமாய் சேர்த்து வைத்து தளபதி விஜய்யின் பேச்சு உண்டாக்கியதுதான் உள்ளபடியே சலசலப்பு என சொல்ல வேண்டும்.

பேச்சில் சில துளிகள் : நண்பர்களே நண்பிகளே… இதுவரை சினிமா மேடைகளில் மட்டுமே பேசிய நான் இப்போது முதன் முறையாக மாணவர்கள் நிறைந்த சபையில் பேசுகிறேன். பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப் போல உணர்கிறேன் ! மனிதன் பணத்தை இழக்கலாம், எதையும் இழக்கலாம்; குணத்தை மட்டும் இழக்கக் கூடாது. பெற்றோர் கண்காணிப்பிலிருந்து வெளியே போகும்போது கிடைக்கும் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துங்கள்! ஜாலியாக இருங்கள். நம் வாழ்க்கை நம் கையில் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்! – இதுவரைக்கும் சரி. அடுத்தடுத்த வரிகளில்தான் அரசியல் எண்ட்ரீக்கான வார்த்தைகள்.
“அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சமூக வலைத்தளத்தில் தவறான செய்தி பரப்புவோருக்கு ஏதோவொரு உள்நோக்கம் இருக்கும். எந்த சமூகவலை தளத்தை நீங்கள் பின் தொடர்கிறீர்களோ அதை வைத்து நீங்கள் யார் என்பதை முடிவு செய்து விடலாம். பாடப் புத்தகங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும்! நீங்கள்தான் வரக்கூடிய நாட்களில் முதல் தலைமுறை வாக்காளர்களாக மாறவிருக்கிறீர்கள். அத்தனையையும் இனிமேல் தீர்மானிக்கப் போவது நீங்கள்தான். காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டு தலைவர்களை தேர்ந்தெடுக்காதீர்கள். காசு வாங்கி விட்டு ஓட்டு போடுவது என்பது மிகவும் தவறானது. வாக்குக்காக பணம் வாங்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு சொல்லுங்கள். நம் விரல்களை வைத்தே நம்முடைய கண்களை குத்திக் கொண்டிருக்கிறார்கள், அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது! வருங்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களே, உங்கள் மூலம் நான் என்னை காண்கிறேன்”…
தமிழ்நாட்டு அரசியல், தமிழ்நாட்டு அரசியல் மீதான பாஜகவின் அரசியல் என்ற தகிக்கும் சூழலில்தான் கொளுத்திப் போடும்படியான இப்படியொரு பேச்சு, இப்படியொரு விழா….
கார்த்திகேயன் பாரதி பி.எஸ்.

