சிறுமி பாலியல் வன்கொடுமை : குற்றவாளி கைது|சிறை|

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு மாணவி கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது. பின் தொடர்ந்த ஒருவன் சிறுமியை தூக்கிச் பாலியல் வன்கொடுமை செய்து தப்பினான்.

இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ஆரம்பாக்கம் காவல்துறையினர், ஐந்து தனிப் படைகள் அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். குற்றவாளியின் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் அவனது புகைப்படத்தை போலீசார் நாடெங்கும் துண்டுப் பிரசுரங்களாக ஒட்டினர். புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து ரகசிய தகவல் அளிப்போர்க்கு ரூபாய் ஐந்து லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இந் நிலையில் ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டை ரெயில் நிலையத்தில் வைத்து ரெயில்வே போலீசார் மற்றும் மாநில போலீசார் சந்தேக நபரை சுற்றி வளைத்துப் பிடித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சந்தேக நபரை அழைத்து வந்து விசாரணையை தொடங்கினர்.

அதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் அவனது புகைப்படத்தை காட்டி குற்றவாளி அவன் தான் என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கர்க் நேரடியாக காவல் நிலையத்திற்கு வந்து அவனிடம் விசாரணை மேற்கொண்டார்.
இதற்கிடையில் நாடே பரபரப்பாய் பேசிக் கொண்டிருந்த வழக்கின் குற்றவாளி கைது செய்யப்பட்ட தகவலறிந்து சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி குற்றவாளியை அங்கிருந்து கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணையை தொடர்ந்தனர்.
சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், குற்றவாளியான நபர், வட மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா (28) என்பதும் ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டையில் உள்ள தாபா உணவகத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

அடுத்த கட்டமாக போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அவன்மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ஊடகத்தினர் அவனைப் படம்பிடித்து விடக் கூடாது என்பதற்காக முகமூடி அணிவித்து பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றினர். அப்போது பொதுமக்கள் சிலர் வாகனத்தை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்து குற்றவாளியை ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டை அழைத்துச் சென்று அவன் பணிபுரிந்த தாபா உணவக ஊழியர்களிடமும் அவனைப் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அங்கிருந்து அழைத்து வரப்பட்ட குற்றவாளிக்கு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. மீண்டும் கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட குற்றவாளியை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிடிபட்ட குற்றவாளி இதேபோன்று வேறு ஏதேனும் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளானா? அவன் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளனவா, பாலியல் குற்றத்தில் அவன் மட்டும்தான் ஈடுபட்டு வந்தானா அல்லது இது போன்ற குற்றச் செயல்களுக்கு அவனது நண்பர்கள் யாரேனும் துணை போய் உள்ளனரா? என்பதை கண்டறிவதற்காக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் மீண்டும் காவலில் எடுத்து குற்றவாளியிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திராவிலுள்ள தாபா உணவகத்தில் உடன் வேலை செய்வோர்,
“கடந்த ஐந்து ஆண்டுகளாக அவன் அங்கு பணிபுரிந்து வந்தான், வாரத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விடுவான்” என தெரிவித்தனர்.

குற்றவாளியின் பூர்வீகம் மற்றும் அவன் குறித்த முழு விவரங்கள் குறித்த தகவல்களோ கிடைக்கவில்லை இதனை தொடர்ந்து ஆரம்பாக்கம் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்னிலையில் குற்றவாளியை ஆஜர் படுத்தினர், வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டதை அடுத்து காமக்கொடூரன் ராஜு பிஸ்வ கர்மாவை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 12 நாட்களாக பதற்றத்துடன் இருந்த ஆரம்பாக்கம் பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *