கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா
மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 12 பெட்டிகள் சரிந்து,
எதிர் தண்டவாளத்தில் விழவே, எதிரே வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மோதியது. இதில் பெங்களூரு- ஹவுரா
சூப்பர்பாஸ்ட் ரயிலின் 3 முதல் 4 பெட்டிகள் தடம் புரண்டது. இரண்டு பயணிகள் ரயிலுடன், மூன்றாவதாக
வந்த சரக்கு ரயில் ஒன்றும் இவைகளோடு மோதி விபத்தை கடுமையாக்கியுள்ளது.
இந்திய அளவில் இதுவரை நிகழ்ந்த ரயில் விபத்துகளில் இதுதான் மிக மோசமான விபத்து என தெரிவிக்கப்பட்டிருப்பதே விபத்தின் கோரத்தை சொல்லிவிடுகிறது.
இந்த ரயில் விபத்தில் 238 பேர் உயிரிழந்ததாக இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்த சில நிமிடங்களில் 288 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக கொல்கொத்தாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் இரண்டு ரயில்களின் கணக்கையும் சேர்த்து மொத்தம் 17 பெட்டிகள் தடம்புரண்டதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோர விபத்தில் 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து வருவதால் பலி எண்ணிகை குறித்த முழுமையான விபரம்
கிடைப்பதற்கு (2023- ஜூன் -3) இன்று நள்ளிரவு ஆகலாம் என தெரிகிறது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில்
என்பதால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் இந்த ரயிலில் பயணித்திருக்கக்கூடும் என்ற பதற்றம் தமிழ்நாட்டில் அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது. அடுத்தடுத்த தகவல்களின் அடிப்படையில் விபத்தில் உயிரிழந்தவர்களில் 35 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்
என்பது தெரியவந்துள்ளது. மொத்தக் கணக்குப்படி தமிழ்நாட்டை சேர்ந்த 127 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்து இருந்தனர்
தமிழ்நாடு அரசு, நிலைமையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு உடனடி களப்பாட்டில்
இறங்கியுள்ள்து. ஜூன் -3ஆம் தேதி திமுகவின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் ஓரமாய் வைத்துவிட்டு சம்பவ இடத்துக்கு விரையும்படி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைக் கொண்ட குழுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட உடனே அந்தக் குழு புறப்பட்டு விட்டது.
மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பாலசோரில் உள்ள ஒடிசா ரயில் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதோடு, ”சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும். மீட்புப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு
போதுமான மருத்துவ உதவியை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படும். ரயில் பாதுகாப்பு ஆணையர் சுதந்திரமான விசாரணையை நடத்துவார்.இது ஒரு பெரிய சோகமான விபத்து. ரயில்வே, என்.டி.ஆர்.எஃப், எஸ்.டி.ஆர்.எஃப் மற்றும் மாநில அரசு ஆகியவை மீட்புப் பணியில்
ஈடுபட்டுள்ளன. சிறந்த மருத்துவ வசதிகள் செய்து தரப்படும். இழப்பீடு தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்கு பின், சீரமைப்பு பணிகள் துவங்கும்.
விரிவான உயர்மட்ட விசாரணையும் நடத்தப்படும். இந்த துயரச் செய்தி, எனது கேபினட் கவனத்துக்கு வந்த சில நிமிடங்களிலேயே மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டது” என்றார்.
தென்கிழக்கு வட்டத்தின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி தலைமையில் உரிய விசாரணை நடத்தப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் விபத்து குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி ஒடிசா செல்கிறார். பாலாஷோரில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பின், கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை
சந்திக்க உள்ளார். புவனேஷ்பர், கொல்கத்தாவில் இருந்து மீட்புக்குழு, என்.டி.ஆர்.எஃப்., மற்றும், விமானப்படை
ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப் பட்டுள்ளது :044 2859 3990, 94458 69843- அதேபோல் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொன்.கோ.முத்து