கார் மீது மரம் விழுந்ததில் காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ஐஓபி மேனேஜர் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அருகில் இருந்த அவர் தங்கை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். சென்னை போரூர் மங்கலம் நகரைச் சேர்ந்தவர், வாணிகபிலன் (57). இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மேனேஜர். தங்கை எழிலரசி (52) யுடன் காரின் பின்னிருக்கையில் அமர்ந்து இன்று மாலை பயணம் செய்தார். டிரைவர் கார்த்திக் காரை ஓட்டிவந்தார். கே.கே.நகர்
லட்சுமணசாமி சாலையில் இருந்து பி.டி. ராஜன் சாலையில் கார் சென்ற போது மரம் ஒன்று காரின் மீது விழுந்தது. எதிர்பாராத இந்த விபத்தில்
வாணி கபிலன், எழிலரசி மற்றும் கார் டிரைவர் கார்த்திக் சிக்கிக் கொண்டனர்.
விபத்தில் வாணிகபிலன், அதே இடத்தில் இறந்து போனார். அவர் தங்கை எழிலரசி, காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு போகப்பட்டார். அதே போல் டிரைவர் கார்த்திக்கும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
மழைநீர் வடிகால் பணிகளுக்காக சாலையில் நீளமாக பள்ளம் தோண்டி வைத்திருந்த நிலையில் சாலையின் ஓரம் இருந்த மரம் கார்மீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ராஜ்-செல்வா