தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில், 2,500 பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கான அவசர பொத்தான்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், துறை அதிகாரிகள், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் முன்னிலையில் முதற்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின், ‘நிர்பயா பாதுகாப்பு நகரத் திட்டத்தின்’ கீழ் இதற்கான நிதி பெறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 500 பேருந்துகளில் தலா 3 சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் 4 அவசர அழைப்பு பொத்தான்கள் பொருத்தப்பட்டு, அதன் முன்னோட்ட செயல்பாடும் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்னரே, ‘நிர்பயா பாதுகாப்பு நகர திட்டம்’ கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியானது செலவிடப்படாமல் திரும்பவும், மத்திய அரசின் கஜானாவுக்கே சென்ற நிலையில் – இப்போதைய தமிழ்நாடு அரசு அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.
திட்டத்தின் முழு அமைப்பும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இயங்கும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை வழியாக கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மற்றவர்களால் தொந்திரவு ஏற்பட்டாலோ, பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, அவசர அழைப்பு பொத்தான்களை அழுத்தி, அந்நிகழ்வுகளை பதிவு செய்ய முடியும். பேருந்து நடத்துனர் பேருந்தில் உள்ள பொத்தானை அழுத்தும் ஒலி ஏற்படும் போது அங்குள்ள நிலைமையை கண்காணித்து, அதற்கேற்றவாறு போலீஸ் உதவியோ, மருத்துவ உதவியோ தேவைப்படும் பட்சத்தில் செல்போனில் தொடர்பு கொண்டு புகாரளிக்கும்படி சொல்லப்பட்டுள்ளது. புகார் சென்றவுடன் தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் உள்ளவர்கள் உரிய நடவடிக்கையை எடுப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் பொத்தான் மற்றும் சிசிடிவி கேமராக்கள் உள்ள பேருந்துகள் சிலவற்றில் ஏறி பயணம் செய்தேன். மறக்காமல் நடத்துனர் – ஓட்டுநர்களிடம் பொத்தான் குறித்து பேசிப்பார்த்தேன்.
“என்னமோ ஸ்டிக்கரைக் கொண்டாந்து ஒட்டிட்டுப் போயிருக்காங்க. பஸ்சை நாங்க ஓரங்கட்டிட்டுப் போவும் போது யாராவது இந்த பட்டனை அழுத்திட்டுப் போயிட்டாங்கன்னா, எங்களைக் கூப்பிட்டு யாரு என்ன கேப்பாங்கன்னும் தெரியலை. இது எதுக்கு, என்ன சமாச்சாரம்ன்னும் தெரியலே. போவப்போவ எல்லாம் சரியாகிடும்” என்றே பதில் அளித்தனர்.
அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரின் திட்டப்பணி சிறப்பு, வாழ்த்துகள். போக்குவரத்துத்துறை அதிகாரிகள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அனைவருக்கும் ‘பொத்தான் பயன்பாடு’ குறித்து விளக்கவும், அவர்கள் மூலம் மக்களுக்கு இதைக் கொண்டு செல்லவும் உரியவர்கள் வழிவகை செய்யவேண்டும்.
ந.பா.சேதுராமன் –