மனைவியை கொலை செய்த குற்ற வழக்கில் ஆயுள்சிறை பெற்று நன்னடத்தை சான்றில் ரிலீசாகியிருந்த நபர் வீட்டில் போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் 184 கிலோ மூலப் பொருளை போலீசார் கண்டெடுத்தனர். இது தொடர்பாக போலீசார் மூவரை கைது செய்துள்ளனர்.
சென்னை தண்டையார் பேட்டை, வினோபாநகரைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது. மனைவியை கொலை செய்த வழக்கில் ஆயுள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தவர். சாகுல்ஹமீது வீட்டில் போதைப் பொருள் (Ephedrine) வகை மூலப்பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக ஆர்.கே.நகர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரவீன் குமாருக்கு கிடைத்த தகவலின், தனிப்படை போலீசாருடன், சாகுல் ஹமீது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது கூட்டாளிகளான அதே பகுதி கருணாநிதி நகர் சுரேஷ், எம்.கே.பி. நகர் சௌகத் அலி ஆகியோர் அந்த வீட்டில் பதுங்கியிருந்தனர். சோதனையில் 8 மூட்டைகளில் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருள் (184 கிலோ) கைப்பற்றப் பட்டது. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மாதிரிகளை உண்மை தன்மை அறிய அயப்பாக்கத்தில் உள்ள போதைப் பொருள் பகுப்பாய்வு மைய ஆய்வகத்திற்கு ஏட்டய்யா ராமு மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், மீட்புப் பணியில் ஈடுபட்டு வெற்றிகரமான ரிசல்ட்டைக் கொடுத்த போலீஸ் டீமை பாராட்டியுள்ளார்.
– விகடகவி எஸ். கந்தசாமி.