114 கி.மீ. நீள ஆரணியாற்றைக் காப்பாற்ற என்ன வழி?

திருவள்ளூர் மாவட்ட ஆரணியாறு ஆக்கிரமிப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது ஆரணி ஆறு. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கர்ணித் மலைப் பகுதியில் துவங்கி பிச்சாட்டூர் அணையின் முனைப்பைக் கடந்து தமிழ்நாட்டு எல்லைப் பகுதி நால்முனைகளான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்தோடி லட்சுமிபுரம் அணைக்கட்டை அடைந்து அதன் வழியாக பழவேற்காடு உள் நுழைந்து வங்கக்கடல் அடைகிறது. ஆரணி ஆற்றின் மொத்த நீளம்,114.8 கி.மீ. ஆற்றின் கரையோர பகுதியில், ‘ஆரணியாறு’ தயவை எதிர்பார்த்து 4,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. லட்சுமிபுரம், பாலீஸ்வரம் ஆகிய தடுப்பு அணைகளில் தலா 5,000 கனஅடி தண்ணீர் மட்டுமே சேகரிக்க முடியும். ஆற்றில் தடுப்பணைகள் போதிய அளவு இல்லாததால் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து 7 முதல் 12 டிஎம்சி தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலக்கிறது. பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், கழிவுநீர் அனைத்தும் ஆற்றில் கொண்டு வந்து கொட்டப் படுகிறது. ஆரணி ஆறு முழுவதும் ஆங்காங்கே சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, வனம் போல் காட்சி அளிக்கிறது… ஆற்றின் துணைக் கால்வாய்கள், ஆற்றுப்படுகைகள், தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆரணி ஆற்றின் பரப்பளவு வெகுவாகக் குறைந்து வருகிறது. ஆக்கிரமிப்பை அகற்றி, ஆரணி ஆற்றை பாதுகாக்க வேண்டுமென விவசாயிகள் தரப்பில் பொதுப்பணித்துறை, நீர் ஆதாரத்துறை, மாவட்ட ஆட்சியர் என பலதரப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை. இதுபோன்ற சூழலில் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற சமூக ஆர்வலர் இது குறித்து பொதுநல வழக்கை தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதிகள்,முனீஸ்வர் நாத் பண்டாரி, பாரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று (19.04.2022) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், மாநில பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆரணியாற்றின் அடுத்த கட்டம் அடுத்தவாரம் தெரியும்…

– தேனீஸ்வரன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *