சென்னை கோயம்பேடு பகுதியில் முதியவரை தாக்கி செல்போன் பறித்த ஓட்டல் தொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, ஆவடி, கன்னையா வசிப்பவர் தங்க பாண்டியன். திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று விட்டு 17ஆம் தேதி அதிகாலை கோயம்பேடு பேருந்து முனையத்தில் இறங்கியுள்ளார். அருகில் உள்ள ஓட்டலில் சாப்பிடலாம் என நினைத்து, ஓட்டலின் முன்பு போடப்பட்டிருந்த தார்பாயை திறந்து பார்த்த போது, உள்ளே இருந்த இருவர், தங்க பாண்டியனை அவதூறாக பேசியதோடு இருவரும் சேர்ந்து தங்கப்பாண்டியனை அடித்துள்ளனர். தங்கப்பாண்டியன் வைத்திருந்த செல்போனையும் அவர்கள் பறித்ததோடு அவரை விரட்டியுள்ளனர். அங்கிருந்து தப்பித்து ஓடிய தங்கப்பாண்டியன், சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்தனர். கோயம்பேட்டில் தங்கி ஓட்டலில் வேலை பார்க்கும் பெங்களூருவைச் சேர்ந்த சுரேஷ், திருவாரூர் ஹாஜ் முகமது ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
– விகடகவி எஸ். கந்தசாமி –