தனிப்படை போலீஸ் போல் நடித்து ஜி-பே மூலம் மாமூல் !

கஞ்சா ஒழிப்பு தனிப்படை போலீசார் என்றும், போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய பைக்கில் சுற்றியும் மக்களை அச்சுறுத்திய ஆசாமிகள் போலீசில் சிக்கியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஒரகடம் காரணித்தாங்கல் பகுதியில் ஏராளமான தனியார் கம்பெனிகள் இயங்கி வருகின்றன. அந்த வகையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லூட்புர் ரகுமான் என்பவரும் ஒருவர். சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு தங்கியுள்ள விடுதி நோக்கி நடந்துபோய்க் கொண்டிருந்தார். அப்போது போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிய பைக்கில் வந்த இருவர், லூட்புர் ரகுமானை வழிமறித்து நிறுத்தினர். லூட்புர் ரகுமான் கஞ்சா வைத்திருப்பதாக கூறி, அவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு, உங்களை போலீஸ் ஸ்டேசனில் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

பைக் சிறிது தூரம் சென்றதும், லூட்புர் ரகுமானிடமிருந்து கூகுள் பே (G Pay) மூலம், ஐந்தாயிரம் ரூபாயை பரிவர்த்தனையாக பெற்றுக் கொண்டு, ‘கூப்பிடும் போது விசாரணைக்கு வரவேண்டும்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய் விட்டனர். பாதிவழியில் பைக்கிலிருந்து இறக்கி விடப்பட்ட லூட்புர் ரகுமான், ஒரகடம் போலீஸ் ஸ்டேசனுக்குப் போய் நடந்ததைச் சொல்லி புகார் அளித்தார். காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி., டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் போலி – போலீசாரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது. போலீசாரின் முயற்சியில் காரணிதாங்கல் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், வஞ்சுவாஞ்சேரியைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவர்தான் தனிப்படை போலீஸ் போல ஆக்டிங் கொடுத்து வசூல் வேட்டையில் இறங்கினர் என்று தெரிய வந்தது. POLICE ஸ்டிக்கர் ஒட்டிய பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கூகுள் பே – மூலம் 5 ஆயிரம் ரூபாயை லூட்புர் ரகுமான் கணக்கிலிருந்து பரிவர்த்தனை செய்தது உறுதியானது. இதையடுத்து இருவரும் கைது செய்யப் பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப் பட்டனர்.

-பாலகுமாரன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *