பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை தனியார் கல்லூரிக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசு அதிகாரிகளைக் கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப் பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
எங்கே எப்போது இந்த கொடுமை நடந்தது என்று பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கள்ளுக்கடை மேடு, குப்பம் பகுதியில், பழங்குடியின மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக 150- க்கும் மேற்பட்ட குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை இவர்களுக்கு இருக்கிறது. தொண்ணூறு குடும்பங்களுக்கு ஏற்கனவே வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 60 குடும்பத்தினருக்கு வீட்டுமனை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 3 ஏக்கர் 80 சென்ட் நிலம்தான் இப்போது மாயமாகி இருக்கிறது. வருவாய் அதிகாரிகள் தனியார் கல்லூரி ஒன்றுக்கு இந்த இடத்தை தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேற்கண்ட தகவலால் பாதிக்கப்பட்ட பழங்குடி இனமக்கள் வருவாய்த்துறை அதிகார அத்துமீறலைக் கண்டித்து பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர், தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். கோரிக்கை மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை நம்பி, பழங்குடியின மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளனர்…
-தேனீஸ்வரன் –