மீஞ்சூர் பகுதியில் புதிதாய் 2 காவல் நிலையங்கள்! ஆவடி போலீஸ் கமிஷனர் ரத்தோர் தகவல்.

திருவள்ளூர் மாவட்ட மீஞ்சூர் சுற்றுப் பகுதியில் குற்றங்களை தடுக்க புதிதாய் இரண்டு போலீஸ் ஸ்டேசன்கள் உருவாக உள்ளது. போலீசாருக்கு வெய்யில் கால பாதுகாப்பு தொப்பி, கூலிங் கண்ணாடி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இதை தெரிவித்தார். மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் கனரக வாகனங்கள், எண்ணூர் மீனவ குடியிருப்புப் பாதைவழியாய் செல்வதைத் தவிர்க்கும் வகையில் தடுப்பு அரண் அமைத்து நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.  தடுப்பு அரணை ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மீஞ்சூர் சுற்றுப்பகுதியில் முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தையும் அப்போது அவர் இயக்கினார். வெயிலில் தற்காத்துக் கொள்ள தொப்பி, கூலிங் கண்ணாடிகள், இரவு நேரத்தில் ஒளிரும் மேலங்கி ஆகியவற்றை போக்குவரத்து காவலர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து போக்குவரத்து காவலர்களுடன் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் செல்பி எடுத்ததால் காவலர்கள் உற்சாகமடைந்தனர். “சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியேறும் கனரக வாகனங்களால் மீனவ கிராமங்களில் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த அரண் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விபத்துக்களை குறைக்க தேவையான நடவடிக்கைகள், அவ்வப்போது விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. மீஞ்சூர் சுற்றுப் பகுதிகளில் மேலும் புதிதாக இரண்டு காவல் நிலையங்கள் அமைப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். அரசிடம் ஒப்புதல் பெற்று அதற்கான பணிகள் தொடங்கப்படும். சாலை அமைக்கும் பணிகள் இங்கே பரவலாக நடப்பதால் துறைமுகங்கள், தொழில் நிறுவனங்களில் இருந்து செல்லக் கூடிய கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வழிமுறைகள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குட்கா, கஞ்சா பதுக்கலையும் தொடர்ந்து கண்காணித்து பறிமுதல் செய்து, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தெரிவித்தார். சாலை விபத்துக்களில் மாணவர்கள் சிக்குவதை தவிர்க்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தன்னார்வல மாணவர்களை கொண்டு போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபடுத்தி சாலை பாதுகாப்பை மாணவர்கள் தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார். பேட்டியின் போது போலீஸ் துணை கமிஷனர் எம்.எம். அசோக்குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

– தேனீஸ்வரன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *