(1) மாநகர பேருந்தின் படிக்கட்டில் உள்ள கண்ணாடியை உடைத்ததாக பள்ளி மாணவர்கள் நால்வரைப் பிடித்து வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பேருந்து நடத்துநர் குணசேகரன், ஓட்டுநர் பார்த்தசாரதி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை. தி.நகர் முதல் மேடவாக்கம் வரை செல்லும் 51 ஏ என்ற எண்ணுள்ள பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்ததாக அரசு மேனிலைப் பள்ளி மாணவர்கள் நால்வர் சிக்கியுள்ளனர். தி.நகரில் இருந்து சைதாப்பேட்டை கோர்ட் வழியாக பேருந்து மேடவாக்கம் நோக்கி சென்ற போது, சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் சம்பவம் நடந்துள்ளது.
(2) தந்தையை கத்தியால் குத்திய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரை சேர்ந்தவர் செல்வம். செல்வத்தின் இளைய மகன் நித்தியானந்தன். ஏ.சி. மெக்கானிக். மதுப்பழக்கத்துக்கு ஆளானவர். சம்பவத்தன்று மது பழக்கத்தை விட்டு விடும்படி அறிவுறுத்திய தந்தை செல்வத்தை கத்தியால் நித்தியானந்தன் குத்தியுள்ளார். படுகாயமடைந்த தந்தையை மூத்தமகன் பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்துள்ளார். செல்வத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து போனார். புகாரின் பேரில் போலீசார் நித்தியானந்தனை கைது செய்தனர்.
(3) இருநூறு ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து டாஸ்மாக்கில் மது வாங்க முயன்றவர் கைது. சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் வீடு தரகர் அஜாஸ். பணியில் தான் இருக்கும் போது இருநூறு ரூபாய் கள்ள நோட்டுகளை கொடுத்து மது வாங்க முயன்ற அஜாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் சேல்ஸ்மேன் சரவணன் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
(4) போதை மாத்திரை விற்ற நபரை, அடையாறு தனிப்படை போலீசார் பிடித்து கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காமராஜபுரம், வேளச்சேரியை சேர்ந்தவர் பாலுசாமி. இவர் போதை தரும் மாத்திரைகளை ( ydol 100 mg tablet : 54 no’ s, M T Syringe : 06 no’s மற்றும் பணம் ரூ. 1650-) விற்றதாக போலீசார் கைது செய்து நெட்வொர்க் குறித்து விசாரித்து வருகின்றனர்.
(5) சென்னை மதுரவாயல் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் சாலிகிராமத்தை சேர்ந்த சுமன் என்ற ஆசாமி கைது செய்யப்பட்டார்
பணி முடித்து வீட்டுக்கு திரும்பும் நடைபாதை என்பது பெரும்பாலும் பெண்களுக்கு ஆபத்தான ஒன்றாகவே இருக்கிறது. அதுவும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சீறும் ஆசாமிகள் அது போன்ற வேளைகளில் அத்து மீறுவதும் தொடர்கதையாக இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் ஒளிரும் சிசிடிவி கேமராக்களே இது போன்ற நிலையில் பெண்களை காப்பாற்றி வைக்கிறது. இந்த அத்து மீறலிலும் ஆசாமி சுமன் சிக்கியது சிசிடிவி உதவியால்தான். போலீஸ் சப். இன்ஸ்பெக்டர் மகராஜன் தலைமையிலான டீம் சிசிடிவி காட்சியை வைத்து சுமனை பைக்கோடு தூக்கி வந்து ( u/s 4 of TNPWH Act) விசாரித்து வருகிறது.
(6) பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டே பயணம். எச்சரித்த காரணத்தால் கல்வீசி தாக்கிய மாணவனை போலீசார் தேடி வருகின்றனர். கோவளம் முதல் பாரிமுனை செல்லும் தடம் எண் 109 என்ற பேருந்தை மோகன் ஓட்டி வந்துள்ளார். நடத்துநர் பிரகாஷ். பேருந்து கொட்டிவாக்கம் அருகே வந்த போது பேருந்தில் ஏறிய பள்ளி மாணவர் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஓட்டுநர் – நடத்துநர் எச்சரித்தும் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார். திருவான்மியூர் ஆர்டிஓ சிக்னலில் மாணவனை கீழே இறக்கி விட்ட நிலையில் அந்த மாணவர் கீழே கிடந்த கல்லை எடுத்து வீசியதில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவி மார்பில் கல் தாக்கியுள்ளது. சம்பவம் குறித்து புகாரின் பேரில் திருவான்மியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
– எஸ். க்ரைம்