
ஆபரேசன் சிந்தூர்.
முன்னே – பின்னே…
காஷ்மீர் மாநில பஹல்ஹாமில் சுற்றுலாவுக்குப் போன 26 பேரை, 2025 ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதக்குழு சுட்டுக்கொன்றது. இந்த கொடூரச்செயலை உலகநாடுகள் பலவும் கண்டித்தன.
பாகிஸ்தான் மட்டும், ‘சம்பவத்துக்கு காரணமே இந்தியாதான்’ என்று வழக்கம் போல பழிபோடும் வேலையில் இறங்கி அடுத்தடுத்து அறிக்கை விட்டது.
‘சிந்துநதி நீர் நிறுத்தம்’ என்றது இந்தியா.
‘சிம்லா ஒப்பந்தம் ரத்து’ என்றது பாக்.
கூடவே, “சிந்துநதி நீர் நிறுத்தம் செய்தால் அதை நாங்கள், போர் பிரகடனமாகவே பார்ப்போம், நாங்கள் ஆயுதங்களை வெற்றுக்கு வாங்கி ஸ்டாக் வைத்திருக்க வில்லை; திருப்பித் தாக்குவோம்” என்றும் பாகிஸ்தான் வேகமாக உறுமியது.
எங்களோடு இந்தியா மோதினால்,
தக்க பதிலடி கொடுப்போம்- என்றதோடு இன்னும் காட்டமாக அறிக்கைகளை விட்டபடி இருந்தது பாகிஸ்தான்.
தீவிரவாதக் கும்பலுக்கு தொடர்ந்து அடைக்கலம் கொடுத்தும் -ஆதரவளித்தும் பாகிஸ்தான் செயல்பட்ட விதமும், அதனால் இந்தியா எதிர்கொண்ட பேரிழப்புகளும் ஏராளம்.
அது மொத்தமும் தேதி வாரியாக அடுக்கி உலகத்தின் பார்வைக்கு வைத்தபடியே ஒவ்வொரு ஆணிகளாய் கழற்றத் தொடங்கியது இந்தியா.
தூதர்கள் வாபஸ், பாகிஸ்தானியர் வெளியேற்றம், இந்திய வான்வழி பறக்க பாகிஸ்தான் விமானத்துக்கு தடை போன்றன அவற்றில் முக்கியமானவை. பாகிஸ்தானும் பதிலுக்கு பதிலாக இந்தியா செய்ததை மட்டுமல்ல, செய்யாததையும் சேர்த்து செய்தது.
கடைசியாக மே 7-2025. அன்று இந்தியாவில் போர் ஒத்திகை என அறிவித்துவிட்டு அ(இ)ன்று அதிகாலை பொழுதிலேயே 25 நிமிடங்களை மட்டும் எடுத்துக் கொண்டு ஒன்பது தீவிரவாத முகாம்களை அழித்து முடித்திருக்கிறது இந்தியா.
காஷ்மீர் முகாம்களை மட்டுமல்ல, பாகிஸ்தான் நாட்டிற்குள்ளேயே அமைந்திருந்த முகாம்களும் இதில் அடக்கம். 1971-ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டுக்குள்ளேயே நுழைந்து தாக்குதலை இந்தியா நடத்தியிருப்பது இப்போதுதான்.
போர் வந்தால் பொருளாதார சீர்குலைவு ஏற்படும், பங்கு மார்க்கெட் சரியும், தங்கமும் நிலமும் பல மடங்கு விலை எகிறும், நூறுகிலோ மூடை அரிசி விலைக்குதான் ஒரு கிலோ அரிசி விற்கக்கிடைக்கும் – என்றெல்லாம் பலர் எழுதியும் பேசியும் வருவதை பார்க்க முடிகிறது. அடிக்கு அடி, ரத்தத்துக்கு ரத்தம் என்றெல்லாம் இந்த தாக்குதலை இந்தியா நடத்தவில்லை. அடிமேல் அடி, அடிமேல் அடி என தொடர் அடிகளும், குண்டு வெடிப்பும், ரத்தச்சிதறல்களும் விடாமல் இந்தியாவை துரத்தி அடித்த பின்னரே “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்ற பாலிஸியை கைக் கொண்டிருக்கிறது இந்தியா.
அதுவும் மிக மிக நுட்பமாக, “இந்தா பாருப்பா, நாங்க உங்களை அடிக்கலே. நீங்க சொல்லுறபடி உங்களுக்கே தெரியாம உங்க நாட்டுல பதுங்கியிருக்கிற தீவிரவாதக் குழுவைதான் அடிக்கிறோம்” என்று சொல்லி, நடப்பது “போர்” இல்லை,
சிறுதாக்குதல் மட்டும்தான் என்று
உலக அரங்கில் சொல்லாமல் சொல்லியிருக்கிறது இந்தியா.
இந்தியா இப்போதும் அமைதி காத்தால் உலகளவில் அது ‘பயந்தாங் கொள்ளி’ பட்டத்தை இந்தியாவுக்கு கொடுத்து விடுவதோடு – கொசு போன்ற நாடுகளும் வல்லரசு இந்தியாவை நோக்கி எள்ளல் செய்யத் தொடங்கி விடும், சீண்டவும் செய்யும். ஒருபோதும் அது நடக்கவே கூடாது.
இருப்பினும், வேகத்தை குறைத்துக் கொண்டு, உலகப் பார்வைக்கு இந்தியா கொண்டு போன தரவுகளால் சுதாரித்துக் கொண்ட நாடு ஈரான்தான்.
‘பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் செய்து வைக்கிறோம்’ என்றது ஈரான்.
ரஷ்யாவோ, “இந்தியாவின் நிலைப்பாடு மிக சரி” என்றிருக்கிறது. சீனாவோ வழக்கம் போல் பங்காளியின் குரலாக, “இந்தியாவின் தாக்குதல் வருத்தம் அளிக்கிறது” என்று அழுது முடித்துள்ளது.
“இந்தியா -பாகிஸ்தான் இடையேயான பதற்றநிலை கவலை அளிக்கிறது” என்று பொதுவாக கவலைப்பட்டிருக்கிறது ஆப்கானிஸ்தானின் தலிஃபான் அரசு.
உலகளாவிய பெரும்பான்மை இஸ்லாமிய நாடுகள், இந்தியாவை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முன் வரவில்லை – வரவும் வராது.
இந்திய இஸ்லாமியர்கள் நிலைப்பாடோ எப்பவும் போல என்வழி தனிவழிதான். “சும்மா சொல்லிட்டே நிக்காதீங்க, பீரங்கியில மருந்தைப் போட்டு அடிக்கறதுக்கு ஒரு வாரமா டைம் எடுப்பீங்க?” என்பதுதான் அவர்களின் கேள்வியே.
“அவங்களுக்குள்ள ரொம்ப நாளாவே பிரச்சினை ஓடிக்கிட்டிருக்கு” என்று பட்டும் படாமலும் விவகாரத்தை கடந்து போயிருக்கிறது அமெரிக்கா.
தீவிரவாதத்துக்கு எதிரான தாக்குதலை நடத்திய தலைமை ராணுவ அதிகாரிகள் இருவர்.
ஒருவர், வயோமிகா சிங். (விமானப்படை சீருடை), இன்னொருவர் சோபியா குரேஷி. (தரைப்படை சீருடை) (படம் குறிப்பு)
முன்னவர் இந்து
பின்னவர் இஸ்லாமியர்.
இருவரும் இந்தியர்.
இதுதான் இந்தியா.
ந.பா.சேதுராமன்