காரைக்கால் கோயில் நில மோசடியில் சிக்கி கைதான துணை ஆட்சியர் ஜான்சனுக்கு உதவ போலீசாரே களத்தில் இறங்கியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸ் பிடியிலிருக்கும் ஜான்சனை காப்பாற்ற மது வியாபாரியிடம் போலீஸ் எஸ்.பி. யே கெஞ்சியுள்ளதாக வெளியாகியுள்ள இன்னொரு தகவல், பரபரப்பின் உச்சம்.
புதுவை மாநிலம் காரைக்கால் பார்வதீஸ்வரர் திருக்கோயில், மிகப் பழமையானதும், பரிகாரத் தலமாகவும் விளங்கும் கோயில் என்பதால் இந்தக் கோயில் உலகப் பிரசித்தம் பெற்றது. கோயிலின் பலநூறு ஏக்கர் சொத்துகள் ஏற்கெனவே வீடுகள், வணிக வளாகங்கள் என ஆக்கிரமிப்பில் சிக்கிக் கொண்டுள்ளன. இவை போதாதென கோயில் நிலத்தை வளைத்து பிளாட்டுகளாய் அதை மாற்றம் செய்ததோடு, பிளாட்டு சாவியை அமைச்சரே பொதுமக்களுக்கு வழங்கவுள்ளார் என்றெல்லாம் சொல்லி பிளாட் ரேட்டை எகிற வைத்தது ஆக்கிரப்பு கும்பல். இதெல்லாம் நாம் அண்மையில் பார்த்த சற்றே முந்தைய கதை.
இப்போது அதன் தொடர்ச்சியாக முளைத்துள்ள இன்னொரு விவகாரம்தான், வழக்கில் சிக்கி சிறையில் உள்ள துணை ஆட்சியர் ஜான்சனை வெளியில் கொண்டுவர போலீஸ் எஸ்.பி.யே, டீலில் இறங்கியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்.
புதுச்சேரி அரசு, ஜான்சனை தற்காலிக பணி நீக்கமும் செய்திருக்கிற நிலையில்தான், அவரை காப்பாற்ற போலீசார் இறங்கியுள்ள வெட்கக்கேடான செயலும் அம்பலப் பட்டுள்ளது. கோயில் நிலத்தை மனைகளாக்கி விற்ற பணத்தை கேளிக்கை, சுற்றுலா, சிகிச்சை என செலவிட்டதாக ஜான்சன் வாக்குமூலம் தந்துள்ளார் என்பது ஒரு பக்கம்…
அதே வேளையில் பொதுமக்களிடம் மனைகளுக்காக ஜான்சன் வாங்கிய பணத்தை ஜான்சனிடமிருந்து மீட்டு நீதி மன்றத்தில் ஒப்படைக்கும் வேலைகளில் தனிப்படை போலீசார் இறங்கியுள்ளனர். ஆனால், ஜான்சனிடம் பணம் இல்லாததால், ஜான்சனுக்கு உதவுவதற்காக காரைக்கால் வடக்கு காவல்துறை S.P. சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் ஒருவருடன் சேர்ந்து பணம் வசூலிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது அம்பலப்பட்டுள்ளது.
முதற் கட்டமாக காரைக்கால் மதுபான உரிமையாளர் ‘மஞ்சள் செல்வம்’ என்பவரிடம் ரூபாய் 30 லட்சம் கேட்டு எஸ்.பி. சுப்பிரமணியன் அணுகியுள்ளார்.
“பணத்தை பெற்றதற்கு அத்தாட்சியாக உள்ளே இருக்கும் சஸ்பெண்டு துணை ஆட்சியர் ஜான்சனின் காசோலை, புரோநோட், மற்றும் பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுக்கச் சொல்கிறோம்” என்று மதுபான வியாபாரி ‘மஞ்சள் செல்வம்’ என்பவரிடம் S.P சுப்பிரமணியன் டிமாண்ட் செய்துள்ளது நேர்மையான போலீசாரை வெட்கி தலைகுனிய வைத்துள்ளது என்கிறார்கள், போலீஸ் வட்டாரத்தில்…
தன்னை பணத்துக்காக அணுகிய S.P சுப்பிரமணியனிடம் ‘புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சொன்னால் பணம் தருகிறோம். அமைச்சரை விட்டு எனக்கு போன் செய்யச் சொல்லுங்கள்’ என்று “மஞ்சள் செல்வம்” வண்டியை திசைமாற்றி வேறு வடிவில் கொக்கி போட்டிருக்கிறார். பேசுவாரா அமைச்சர்? ஆகவே கப்சிப் ஆகியிருக்கிறார் எஸ்.பி.,
மதுபான வியாபாரி மஞ்சள் செல்வத்துடன் காரைக்கால் வடக்கு S.P சுப்பிரமணியன் செல்போனில் பேசிய கால் டீட்டெய்ல் புதுச்சேரி காவல்துறை தலைமையகத்துக்கு அனுப்பப் பட்டிருக்கிறது. இந்தத் தகவல் இந்து முன்னணியினர் மூலம் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமசிவாயத்துக்கும் கச்சிதமாக சென்று சென்றுள்ளது. அமைச்சரின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்ட ரகசிய விசாரணையைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட காரைக்கால் வடக்கு S.P சுப்பிரமணியன் உடனடியாக புதுச்சேரிக்கு மாற்றப்படக் கூடும் என்றும், நில மோசடி வழக்கில் S.P சுப்பிரமணியனுக்கும் தொடர்பிருக்கிறதா என அடுத்த கட்டமாக அவருக்கும் நிலமோசடி விசாரணைக்கான சம்மன் அனுப்பி விசாரிக்கப்படலாம் என புதுச்சேரி போலீஸ் தலைமையக ஏரியாவிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.