‘உளவியல்’ தாக்குதல் !

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் நள்ளிரவில் நடைமுறைக்கு வந்திருக்கிறது, கட்டண உயர்வு.
அதேபோல் உச்சம் தொட்டிருக்கிறது, பங்குச் சந்தை வணிகம். ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதை உணரமுடிந்தாலே பிறவற்றையும் நாம் உணர்ந்திருப்போம் என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

“புதிய ஆட்சி அமையப் போவது இல்லை, ஆகவே பங்குச்சந்தை ஏரியாவில் புதிய கொள்கை ஏதும் உருவாகப் போவதில்லை” என்ற மனநிலையே பங்குச்சந்தை புதிய உச்சத்தின் பின்னணி.

மத்தியில் காங்கிரசா பாஜகவா ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்?
என்ற கேள்வி சிலநாள்கள் முன்பு வலுவாக எழுந்த நிலையில்தான் பங்குச்சந்தையில் ஐநூறு புள்ளி
உச்சம் போவதும் ஆயிரம்புள்ளி கீழே இறங்குவதுமாக வணிக உலகத்தின் பதற்றத்தை சொல்லியது.

அடுத்துவந்த எக்ஸிட் ஃபோல் முடிவுகள், பாஜகதான் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கப்போகிறது அதுவும் பெரிய மெஜாரிட்டியுடன் என்று சொல்லி வைக்க, அப்போதும் பங்குச்சந்தை யில்தான் அது எதிரொலித்தது. பங்குச்சந்தை ‘புள்ளி’கள் புதிய உயரம் தொட்டது. இறக்கமே இல்லை, ஏற்றம் மட்டும்தான்!
பங்குச்சந்தையை ஆட்டுவிப்பதும் அதை அரசியல்படுத்தி வைத்திருப்பதும் யார்- யார்? அவர்கள் யார் தோள்மீது ஏறி உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அதேபோல் நள்ளிரவில் சுங்கச்சாவடி களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி கொடுத்திருக்கிறது மத்திய பாஜக அரசு. ‘கட்டண உயர்வு முன்னரே திட்டமிட்டு நடைமுறைக்கு கொண்டு வரும் வேளையில் தேர்தல் வரவே திட்டம் தள்ளிப்போனது’ என்கிறது பாஜக தரப்பு. அடுத்ததும் நாங்கள்தான் என்பதை ‘உளவியல் ரீதி’ யாக ஓங்கி அடிக்கத்தான் சுங்கச் சாவடிகளில் கூடுதல் கட்டணவசூல் திட்டத்தை உடனடியாக கொண்டு வந்ததும்.

இதுவும் போக
தமிழ்நாட்டில் பாஜக, 10 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும், இருபது இடங்களுக்கு மேல் இரண்டாவது இடம் பிடிக்கும் என்றும் சிலர் ‘கன’மாகவே கணித்து சொல்லியிருக்கிறார்கள்…

என்ன சொல்ல!

ந.பா.சேதுராமன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *