திருநங்கையான அதுவும் வயதில் இளஞ்சிறார் ஆனவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்களை குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து பிடி வாரண்ட் பிறப்பித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது நீதி மன்றம்.
2017 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா கிளாய் கிராமத்தில் எரிந்த நிலையில் எலும்பு கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் ஸ்ரீபெரும்புதூரைச்
சேர்ந்த 17 வயதுடைய திருநங்கைதான் எரிக்கப்பட்டவர் என தெரியவந்தது.
சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் விசாரணை நடத்தினார். விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் கிளாய் பகுதியைச் சேர்ந்த கார்த்தி, விஜய் மற்றும் செல்வகுமார் ஆகியோர்தான் திருநங்கையை தனியே அழைத்துச் சென்று அவருக்கு வலுக்கட்டாயமாக மது வாங்கிக் கொடுத்து கூட்டுப் பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு அவரை கொலை செய்து உடலை எரித்தது தெரிய வந்தது.
இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிந்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட. மூவாருக்கும் உடந்தையாக இருந்ததாக மேலும் மூவர் அடுத்தடுத்து பிடிபட்டு குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை காஞ்சிபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 4 வருடங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியான
காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் வழக்கை விசாரித்தார். அப்போது “கூட்டுப்பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்பட்டவர் 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் இந்த வழக்கு வெறும் கொலை வழக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ பிரிவின் கீழோ, தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழோ பதிவு செய்யப்படவில்லை” என்பதோடு பல கேள்விகளை நீதிபதி அப்போது முன் வைத்தார்.
“முறையான வழக்கு விசாரணை நடைபெறவில்லை, மற்றும் சரியான வழக்கு பதிவு செய்யாத விசாரணை அதிகாரிகளை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டுகிறேன்.
இந்த வழக்கு போக்ஸோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும். இந்த குற்ற சம்பவம் நடைபெற்ற சமயங்களில் மற்றும்
விசாரணையின் போது ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தின் ஆய்வாளராக இருந்த நடராஜன் மற்றும் விநாயகம் ஆகியோர் வழக்கை சரியாக கையாளவில்லை. ஆகவே ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக இருந்த டி.நடராஜனை 7-வது குற்றவாளியாகவும், மற்றொரு காவல் ஆய்வாளராக இருந்த ஜெ.விநாயகத்தை 8-வது குற்றவாளியாகவும் சேர்த்து விசாரிக்கவும், அவர்கள் இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பிக்கவும் உத்தரவிடுகிறேன்” என்று நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகிளா மற்றும் போக்சோ நீதிமன்றங்கள் இல்லாத காரணத்தினால், செங்கல்பட்டு மகிளா மற்றும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் உத்தரவில் கூறியுள்ளார்.
பஞ்ச் பாலா