உலக மகளிர் தின நாளில் கோவளம் ஊராட்சி மன்றத் தலைவர், சோபனாதங்கம் சுந்தருக்கு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். அது என்ன, செய்திக்குள் போவோம்…
செங்கல்பட்டுமாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ளது கோவளம் ஊராட்சி. ஊழலற்ற கோவளம் ஊராட்சி என்கிற பச்சைநிற அலுவலகப் பதாகை நம்மை கம்பீரமாய் வரவேற்கிறது. ஊழலற்ற ஊராட்சி என்று நெஞ்சை நிமிர்த்தவும் ஒரு துணிவு வேண்டுமல்லவா- அந்தத் துணிவை இங்கே பார்க்கலாம். ஊராட்சிமன்றத்தின் தலைவராக இருப்பவர்தான் சோபனாதங்கம்சுந்தர். பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு செயல்படுத்திய வகையில் மற்ற ஊராட்சிகளுக்கு முன்மாதிரியாக கோவளம் ஊராட்சியை இவர் மாற்றி வருகிறார் என்பதே மக்களின் கணிப்பு. உலக மகளிர்தின நாளான மார்ச் 8 -ஆம் தேதி சென்னை லயோலா கல்லூரியின் நாட்டு நலத்திட்ட மாணவர்களின் சார்பில் மகளிர் தின விழா கோவளம் ஊராட்சியிலேயே கொண்டாட முடிவானது. முன்னரே கோவளம் ஊராட்சியில் கிராமப்புற மேம்பாட்டு நலப்பணிகள் சிறப்பு முகாம் -2022 நடத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதையொட்டி பல்வேறு சமூகநலப் பணிகளை செய்துவரும் அனைத்து மாணவர்களும் ஒன்று சேர்ந்து திடீர் என முன் தகவலே கொடுக்காமல் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்து சேர்ந்தனர். கோவளம் ஊராட்சி மன்றத் தலைவர்சோபனாதங்கம் சுந்தர், துணைத்தலைவர் ஆதிலட்சுமிபெருமாள் ஆகியோரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கியும், வளாகத்தில் கேக் வெட்டியும், ஊட்டி மரக்கன்றுகள் நட்டு வைத்தும், மகளிர்தின நினைவுப் பரிசுகள் வழங்கியும் கோவளம் ஊராட்சி அலுவலகத்தை அன்பில் மூழ்க வைத்து விட்டனர் லயோலா மாணவர்கள். தலைவர் சோபனாதங்கம்சுந்தர் பேசும் போது, “மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவருக்கும் முதலில் மகளிர் தின வாழ்த்தும் நன்றியும். நாட்டு நலப்பணித் திட்ட முகாமை மக்கள் நலன் கருதி செய்து வருதற்காகவும் லயோலா மாணவர் குழுவுக்கு மனமார்ந்த நன்றிகள். மகளிர் தினவிழாவை நாங்கள் சிறிதும் எதிர்பாராத நிலையில் எங்களுடன் இணைந்து மாணவர்கள் கொண்டாடியதைக் கண்டு மகிழ்கிறேன். ஊராட்சி மன்றம் சார்பாக மாணவ மாணவியருக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், பெண்களுக்கு ஆண்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும், நாங்கள் உங்களுக்கு நிகராகவே எப்போதும் இருக்க விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார். லயோலா கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்களான பொருளாதாரத் துறை பேராசிரியர் முனைவர் ஏ.மாரியப்பன், வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் ஒய். அலெக்ஸாண்டர் , வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் அதிநவீன் மற்றும் முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் நாட்டுநலப் பணித்திட்ட மாணவர்கள், ஊராட்சி மன்ற அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
– பிரீத்தி எஸ்.