நூதன திருட்டு சம்பவங்கள் எல்லா காலகட்டத்திலும் தொடர்கதையாக இருக்கிறது. சரக்கு மற்றும் பணத்துடன் வரும் லாரிகளை கண்காணித்து திருட்டை அரங்கேற்றுவதும் தொடர்கதையாகவே ஆகி விட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் மொத்த விற்பனை மளிகை கடை ஒன்று உள்ளது. நகரில் பிரபலமாக அறியப்படும் அந்த கடை மூலமாக கும்மிடிப் பூண்டி மற்றும் சுற்றுப்புற மளிகை கடைகளுக்கு ஆர்டரின் பேரில் பொருட்கள் வேன்களில் சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக பயன்படுத்தப்படும் மினி லோடு வேன் டிரைவர் மாடசாமி.
பொருட்களை டெலிவரி செய்யும் லோடுமேன் சதன் பாண்டியனோடு டிரைவர் மாடசாமி, லோடு வேனை ஓட்டிச் சென்றார். சரக்குகளை கடைகளுக்கு டெலிவரி செய்த வகையில் வசூலான தொகை ரூ.3 லட்சத்தை கைப்பையில் வைத்து டிரைவர் மாடசாமி, டிரைவர் இருக்கைக்கு பின்னால் வைத்துள்ளார் .
அடுத்த வசூலுக்காக
கவரைப்பேட்டை அடுத்த தச்சூர்-போரக்ஸ் நகரில் வேனை நிறுத்தி விட்டு மளிகை கடை ஒன்றில் மாட சாமியும், சதன் பாண்டியனும் பொருட்களை இறக்கியுள்ளனர். லோடை இறக்கி வைத்து விட்டு வேனுக்கு திரும்பினர். டிரைவர் சீட் பின்னால் வைத்திருந்த கைப்பையை மாடசாமி தேடியபோது அந்த பை கிடைக்கவில்லை. கைப்பையில் இருந்த ரூபாய் 3 லட்சமும் பையோடு களவு போயிருந்தது. டிரைவர் மாடசாமி இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத் திற்கு வந்த போலீசார் அந்த பகுதியில் இருந்த (சிசிடிவி) கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
கேமராவில் லோடு வேன் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பணப்பையை திருடிச்செல்கிற காட்சி பதிவாகியிருந்தது. லோடு வேன் அந்த பகுதிக்கு அடிக்கடி வருவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பணத்தை திருட திட்டமிட்டு பணத்தை சுருட்டியது தெரிய வந்தது.
கும்மிடிப் பூண்டி போலீஸ் இன்ஸ்பெக் டர் வடிவேல்முருகன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். லோடு வேனில் ரூ.3 லட்சத்தை திருடிய மர்ம ஆசாமிகளை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
பத்து நாட்களுக்கு முன்னர் நடந்த திருட்டு சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடவில்லை.
“சம்பவ இடத்தில் கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை வைத்துக் கொண்டு குற்றவாளிகளை போலீசார் விரைந்து பிடித்தால்தான் வியாபாரிகள் நிம்மதியாக தொழிலை செய்யமுடியும்” என்று கும்மிடிப்பூண்டி வியாபாரிகளும் பொதுமக்களும் குமுறலுடன் குறிப்பிடுகின்றனர்.
முருகசிவம்