சென்னை செங்குன்றம் பகுதியில் மெக்கானிக் ஷெட் நடத்திவரும் தீபேஷ் என்பவரை இருவர் கடுமையாக தாக்கியதில் தீபேஷின், கண் பார்வை பறிபோனது. கடந்த 3-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், தீபேஷின் நிலத்தை அபகரிக்க சென்னை நீலாங்கரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், தனது மனைவியின் சித்தப்பா மகனான தீபேஷை , கூலிப்படை ஏவி தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிப்பதிவு வெளியாகி பதற வைப்பதாக உள்ளது.
ஆவடி போலீஸ் இணை கமிஷனர் விஜயகுமார் உத்தரவின் பேரில் ரெட்ஹில்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்னாதன் தலைமையிலான தனிப்படை போலீசார், குற்றவாளிகளை ஆகஸ்ட் 9- ஆம் தேதி கைது செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உள்ளிட்ட மூவரும், புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் .
சொத்திற்காக போலி ஆவணம் தயார் செய்து மனைவி சசிரேகா பெயரில் 2018-ம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் நிலத்தை பதிவு செய்துள்ளார்.இந்த விவகாரத்தில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது .தீபேஷ் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் உள்ளார்.
ரெட் ஹில்ஸ் அருகே உள்ள தண்டல் கஜானி கிராமத்தில் உள்ள 50 சென்ட் நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடிக்கு மேல் மதிப்புள்ளது. வசந்தன் என்பவரின் பரம்பரைச் சொத்து இது. இரண்டாக இந்த சொத்து பிரிக்கப்பட்டு, ஒரு பங்கு வசந்தனுக்கும் அவர் குடும்பத்துக்கும், மற்றொன்று அவருடைய தம்பி தேவராஜனுக்கும் உரித்தானது.
கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் தேவராஜன் இறந்தார். தேவராஜன் மனைவி விமலாதேவி, தலைமைச் செயலகத்தில் துணைச் செயலாளராகப் பணிபுரிகிறார். இவர்களுக்கு தீபேஷ் என்ற மகனும் உத்ரா என்ற மகளும் உள்ளனர். தேவராஜனுக்கு சொந்தமான சொத்தை அபகரிக்கும் முயற்சியில்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் திட்டம் தீட்டி போலியாக சொத்து ஆவணம் தயாரித்தனர்.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும் தேவராஜன் குடும்பத்தினர் இதை எதிர்த்தனர். இதற்கிடையில், மேற்படி விவகாரத்தில் சமரசம் செய்ய, முயற்சிப்பது போல் நாடகமாடி தீபேஷ் மீது ஆட்களை ஏவி தாக்குதல் நடத்தினார். தாக்குதலில் ஈடுபட்ட இருவர், கைகளால் தாக்கியும்; இரும்பு ஆணியால் குத்தியும் மோசமாக செயல்பட்டதில் தீபேஷ் வலது கண் பெரிதாய் பாதித்து பார்வையும் பறிபோனது.
ஆரம்பத்தில் சிறு தகராறு என நினைத்து தீபேஷ், எதிர் தாக்குதலில் (வீடியோ காண்க) இறங்க, அது பெரிய அளவில் முடிந்து கண்பார்வை பறி போய்விட்டது. எஸ்.ஐ.ஜெயக்குமார் உத்தரவுப்படி, கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் ஜமீத் ரபி, சோழவரம் சந்திரன் ஆகிய இருவரும் தீபேஷ் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து ரெட்ஹில்ஸ் போலீஸார் ஐபிசி 448, 294(பி), 323, 324, 506 (II) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து எஸ்.ஐ. ஜெயக்குமார், ஜமீத் ரபி, சந்திரன் ஆகியோரைக் கைது செய்தனர். மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவான ஸ்ரீதர், வினோத் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
செல்வா அ