ஆரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்றவர்களின் வலையில் மீனாட்சி அம்மன் ஐம்பொன்சிலை கிடைக்கவே அந்த சிலையை வருவாய் துறையிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஆரணி ஆற்றில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் லட்சுமிபுரம் அணைக்கட்டு அருகே தேங்கி நிற்கும் தண்ணீரின் சேற்றில் பதுங்கி இருக்கும் விரால் மீன்களை குறிவைத்து வலையும் கையுமாக இருந்தனர். அப்போது அவர்களின் கைகளில் உலோகப் பொருள் ஒன்று தட்டுப்படுவதை அறிந்து, அதனை வெளியே எடுத்து பார்த்தனர். கலைநயத்துடன் கூடிய அமர்ந்த நிலையில் இருந்த அழகிய மீனாட்சி அம்மனின் ஐம்பொன்சிலைதான் அது. ஒரடி உயரமும், 5 கிலோ எடையும் கொண்ட அந்த சிலை, பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் வசம் ஒப்படைக்கப் பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “சோழர் கால கலை வடிவத்தில் அமைந்துள்ள இந்த சிலை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இதனை காஞ்சிபுரம் தொல்லியல் துறை ஆய்வகத்திற்கு அனுப்பி இதன் பழமை காலம் குறித்து கண்டறியப்படும்’ என தெரிவித்தனர். விரால் மீன் பிடிக்க சென்றவர்களுக்கு ஆற்றில் மீனாட்சி அம்மனே தங்களுக்கு அருள் பாலித்ததாக சிலையை கண்டு எடுத்தவர்கள் பெருமிதத்துடன் கூறினர்.
பொன்.கோ.முத்து