தென்பெண்ணை ஆற்றுநீர் பாசனம் அழியும் அபாயம்!

கர்நாடக மாநிலத்தில் கழிவு நீர் கலப்பதால் கரு நிறத்தில் தண்ணீர் வெளியேறி விவசாய பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் வேதனையில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயியும் சமூக ஆர்வலருமான சோமசேகர் கூறும் போது:

“கர்நாடக மாநிலத்திலும் தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கெலவரப்பள்ளி அணையின் பராமரிப்பு பணி காரணமாக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் நீர் செல்கிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள கனஜூர் என்ற கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றையொட்டி நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, தக்காளி, முட்டைகோஸ், காலிஃபிளவர், உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்பொழுது தென்பெண்ணை ஆற்றில் இருந்து விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் பொழுது அந்த தண்ணீர் கரு நிறத்தில் நுரை பொங்கி வெளியேறுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்று ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்திய பொழுது விவசாய பயிர்கள் பழுப்பு நிறமாக மாறி அழுகிவிட்டது. இந்த நிலையில் தற்போது கரு நிறத்தில் நீர் வெளியேறி வருகிறது. விவசாயிகளும் வேறு வழியின்றி அந்த நீரையே விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். துர்நாற்றம் அதிக அளவில் வீசுவதால் விவசாயிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சட்ட விரோதமாக தென்பெண்ணை ஆற்றில் கலந்து விடப்பட்டுள்ள ரசாயன கழிவு நீரே இதற்கு காரணம். தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலக்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக மாநில அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர் பாசன பகுதிகளில் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும். பள்ளி செல்லும் குழந்தைகளும் இந்த கழிவுநீரில் இறங்கி விவசாயம் செய்வதுதான் காணக் கிடைக்காத கொடுமை”… என்கிறார் வேதனையோடு…

நம்பி

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *