கட்டாய வசூல்! ‘யு’ டர்ன் அடைத்து அநியாயம் செய்யும் சுங்கச்சாவடி…

சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் ‘யு’ டர்ன் அடைத்து விட்டு கட்டாய சுங்க வரி வசூலிப்பு கண்டித்து சரக்குந்து (லோடு லாரி) உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் போராட்டம் என குதித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் ஏற்கனவே யு டர்ன் இருந்த நிலையில், தற்போது அதனை அடைத்து விட்டு சுங்கச்சாவடி நிர்வாகம், கட்டாய வசூலில் ஈடுபடுவதாகவும், அதற்கு காவல்துறை உடந்தையாக இருப்பதாகவும் கூறி சரக்குந்து உரிமையாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த சுங்கச்சாவடியில் போதிய வசதிகள் இல்லை எனவும், சுங்கச்சாவடிக்கு தாங்கள் எதிரானவர்கள் இல்லை எனவும், சுங்கச்சாவடி காலாவதியாகி விட்டதாகவும், சுங்கச்சாவடிகளில் சுங்க வரி முறைகேடாக வசூலிக்கப் படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். சரக்குந்து உரிமையாளர்கள்‌ கூறுகையில், “சுங்கச்சாவடி சாலைகளில்தான் 55 சதவீத விபத்துகள் நடக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அரசு, அகற்றுவது போல், தமிழக அரசும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, 60 கிலோ மீட்டருக்குள் உள்ள ‘டோல்’களை மூன்று மாதகாலத்தில் அகற்றுவோம் என தெரிவித்து, 10 மாதங்களாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மத்தியில் மோடி ஆட்சிக்கு வரும் போது சுங்கச்சாவடியே இருக்காது எனக்கூறிய நிலையில் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லை.வரும் 1-ஆம் தேதியன்று இவற்றையெல்லாம் கண்டித்தும் வலியுறுத்தியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போகிறோம்” -என சரக்குந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *