திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வந்த ஆர்.ஏ.என். என்ற தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வந்தன. தொடர்ந்து பள்ளியை நிர்வகிக்க முடியாததால் அதன் நிர்வாகம் பள்ளியை நிரந்தரமாக இழுத்து மூட முடிவு செய்தது. அதன் காரணமாக முழுக்கல்வி கட்டணம் செலுத்தி பயின்று வந்த பெரும்பாலான மாணவர்கள் தங்களது பெற்றோர் மூலம் மாற்றுக் கல்விச்சான்று பெற்று சென்று விட்டனர்.
இந்நிலையில், அரசு விதிமுறையின்படி அதே பள்ளியில் ஏழை மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் கல்வி பயின்று வந்த மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை முற்றுகையிட்டு வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் நிரந்தரமாக பள்ளியை மூடுவது குறித்து தனியார் பள்ளி நிர்வாகம் முன்கூட்டியே அறிவிக்காததை கண்டித்து அதன் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் மாணவர்களின் பெற்றோர் ஈடுபட்டனர். பிள்ளைகளின் எதிர்கால கல்வியை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
பொன். கோ. முத்து