திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்றை வெறி நாய்கள் சுற்றி வளைத்து துரத்திச் சென்றன. இதனைக் கண்ட பகுதி இளைஞர்கள் சிலர் கற்களை வீசி எறிந்து வெறி நாய்களை விரட்டியடித்தனர். பின்னர் அந்தப் பெண் புள்ளிமானை பத்திரமாக மீட்டு அங்குள்ள அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளி வகுப்பறைக்குள் பாதுகாப்பாக விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த
மாதர் பாக்கம் வன சரகர் டில்லி பாபு தலைமையிலான வனத்துறையினர், அந்த மானை மீட்டு வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர். நாய்கள் விரட்டியதில் தப்பி ஓட முயன்ற
புள்ளிமான் பள்ளியின் நுழைவாயில் இரும்பு கேட்டில் மோதியதில் அதன் நெற்றியில் காயம் ஏற்பட்டது.
இதனால் கால்நடை மருத்துவர்கள் மூலம் மானுக்கு சிகிச்சை அளித்த பின்னரே வனப்பகுதியில் விடப் போவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. இவைகள் தமிழக எல்லையான பழவேற்காடு காட்டுப்பள்ளிவரை இரைதேடி கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன. இரு மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளில்
வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் மற்றும் தாவர உணவுத் தட்டுப்பாடுதான் இதற்குக் காரணம்.
வனவிலங்குகள் இரை தேடியும், நீர் தேடியும் நகர் பகுதிக்குள் வரும் சூழலில் வாகனங்களில் அடிபட்டும், சமூக விரோதிகள் கைகளிலும்,
வெறி நாய்களின் பிடியிலும் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாய் புள்ளிமான்கள் அதிகளவில் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றன. இதனை தடுக்க தமிழக ஆந்திர வனத்துறையினர் வன விலங்குகளுக்கு தேவையான
குடிநீர் மற்றும் தாவர தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொன். கோ. முத்து