காப்புக்காடு வளர்ப்பு திட்டம்!கிராமவாசிகள் கருத்து மோதல்…

திருவள்ளூர் மாவட்டம் நெற்குன்றம் ஊராட்சியில் சுமார் 87 ஏக்கர்
பரப்பளவிலான அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது.
இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கோடு மாவட்ட நிர்வாகம் அங்கு 13 ஏக்கர் பரப்பளவில்
காப்புக்காடு வளர்ப்பு திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.


இதற்காக ஊராட்சி மன்ற நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.
இதற்கு அதே ஊராட்சியில் அடங்கிய மேட்டூ சூரப்பட்டு, பள்ள சூரப்பட்டு ஆகிய கிராமவாசிகள் ஆதரவு தெரிவித்து வரும் வேளையில், நெற்குன்றம் கிராமவாசிகள்
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் காப்புக்காடு வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்துவதில்
சிக்கல் ஏற்பட்டதால் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் இரு தரப்பினரும் பங்கேற்ற சமரச பேச்சுவார்த்தை
நடைபெற்றது.

அப்போது ஒரு தரப்பினர் மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் சவுடு மண் கொள்ளை நடைபெறுவதாகவும், காப்புக்காடு அமைத்தால் மண் திருட முடியாது என்பதால் இத்திட்டத்திற்கு
சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய மற்றொரு
தரப்பினர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் காப்புக்காடு அமைத்தால் ஆடு, மாடுகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் என்றும் எனவே இத்திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் காரசாரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியதால் இரு தரப்பினருக்கும் இடையே அதிகாரிகள் முன்னிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர், தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினர்.

இருந்த போதும் கூட்டத்தில் எந்த தீர்வும் எட்டப்பட்டதால் வேறு வழியின்றி கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அதிகாரிகள் அறிவித்தனர். காப்புக்காடு அமைப்பது தொடர்பாக ஒரே ஊராட்சியை சேர்ந்த இரு வேறு கிராமவாசிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பொன். கோ. முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *