கள்ளச்சாராய சாவுகள் -அலசல்!

கள்ளச்சாராயம் குடித்து இறந்தோர் எண்ணிக்கை இன்றைய தேதிப்படி 20 -ஐ தொட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் தயாரிப்பு என்பது எத்தனை சாதாரணமாகி விட்டது என்பதற்கு இந்த கொடூரமரணங்களே சாட்சியாக நிற்கிறது !
ஆறுதல் தரக்கூடிய விஷயம் எதுவென்றால், ‘இறந்தோர் குடும்பத்துக்கு உடனடி இழப்பீடு, சாராய வியாபாரிகள் உடனடி கைது, மவுனம் சாதித்த போலீஸ் அதிகாரிகள், சஸ்பெண்ட் – இடமாற்ற நடவடிக்கைகள். குறிப்பாய் எஸ்.பி. அந்தஸ்து
கொண்ட ஐபிஎஸ் அதிகாரியையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை’ என்பதுதான்.

கள்ளச்சாராய சாவுகள் விழுந்த மாவட்டமான விழுப்புரத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் விழுப்புரம் அரசு மொண்டியம்பாக்கம் மருத்துவமனை வளாக கூட்ட அரங்கில்
அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவசர ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான்,
உள்துறை முதன்மை செயலாளர் அமுதா, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர்கள் விழுப்புரம் பழனி, செங்கல்பட்டு ராகுல்நாத், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சட்டம் -ஒழுங்கு கூடுதல் போலீஸ் டிஜி.பி. சங்கர், உளவுப்பிரிவு கூடுதல் போலீஸ்
டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன், டி.ஐ.ஜி. பகலவன்,
போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ஸ்ரீநாதா, கள்ளக்குறிச்சி மோகன்ராஜ், கடலூர் ராஜாராம், துரைரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் என பலர் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், ”காவல்துறையின் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்க பிரிவும், கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதில் எந்த விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க கூடாது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும்
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் போன்ற ரசாயனங்கள் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றும் காவலர்கள் தீவிர கவனத்துடனும், அக்கறையுடனும் செயல்பட வேண்டும். அவ்வாறு இல்லாத காவலர்கள் மீது
உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த
இந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே சமயம் நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு
ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். இந்த பிரச்சினையின் மூல காரணங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலும் ஒழித்திடுவதற்கு ஏதுவாகவும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சில மூலப் பொருட்கள் கள்ளச்சாராயம்
தயாரிக்க பயன்படுத்துவதை முழுமையாக தடுத்திடும் நோக்கத்துடனும், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுகிறது” என்றார்.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வந்தவர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். நிவாரண உதவியும் அறிவித்தார். பின்னர், மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன், சப்- இன்ஸ்பெக்டர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் மரியா சோபி, மஞ்சுளா மற்றும் சப் -இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம்
செய்யப்பட்டு உள்ள தகவலையும் அறிவித்தார்.

இதுபோன்ற பணியிட மாற்றங்கள், சஸ்பெண்டுகள் இதற்கு தீர்வாகி விடாது என்றுதான் சொல்லத் தோணுகிறது. வேரில் இருந்து இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்தியம் பார்க்க வேண்டும். போலீஸ் மட்டுமல்ல, துறை வாரியான அதிகாரிகள், உள்ளூர் அரசியல் வாதிகள் உதவி இல்லாமல் இது போன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்துவிட்டு
யாரும் ஒளிந்துகொள்ள முடியாது.

நம்பி

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *