சேலத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். திருவள்ளூர் மாவட்டம் கரடி பூத்தூர் கிராமத்தில் இவருக்கு சொந்தமாக மாந்தோப்புடன் வீடு உள்ளது. ஆந்திர மாநிலம் புத்துரை சேர்ந்த தர்மையா (28) மனைவி லக்ஷ்மி (25) மற்றும் மூன்றுவயது மகனுடன் தங்கி மாந்தோப்பு வீட்டி காவல் பணியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாந்தோப்பு குத்தகைதாரர் கேசவனிடம் வெளியில் சென்று வருவதாக சொல்லி அவருடைய டூ வீலர் வண்டியை தர்மையா வாங்கிச் சென்றுள்ளார். டூவீலரோடு போன தர்மையா, நான்கு நாட்கள் ஆகியும் திரும்பி வரவில்லை. இந்நிலையில் நேற்று (வியாழன்) மாந்தோப்பிற்கு மதுபோதையுடன் வந்த தர்மையாவின் அண்ணன், தோப்பு குத்தகைதாரர் கேசவனிடம் தனது தம்பி தர்மையா குடும்பத் தகராறில் மனைவி லட்சுமியை கொலை செய்து மாந்தோப்பில் புதைத்து விட்டதாக கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குத்தகைதாரர் கேசவன், போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து பாதிரிவேடு போலீசார், மாந்தோப்புக்கு வந்து மண்ணில் புதைத்திருந்த உடலை தோண்டி வெளியே எடுத்தனர். அந்த உடல், தர்மையாவின் மனைவி லட்சுமிதான் என்பதை உறுதி செய்தனர். பின்னர் லட்சுமியின் உடலை, உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் ஞாயிற்றுக்கிழமை அன்று கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில், தர்மையா மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு லட்சுமியின் உடலை யாருக்கும் தெரியாமல் மாந்தோப்பில் குழி தோண்டி புதைத்தபின்னே, காணாமல் போன மனைவியை தேடி செல்வதாக நாடகம் ஆடியது தெரியவந்தது. தற்போது ஆந்திராவில் பதுங்கியுள்ள தர்மையாவை போலீசார் தேடி வருகின்றனர்.
. பொன்.கோ.முத்து