யாகாவாராயினும் நாகாக்க…

எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலை வகிக்க, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக (11.07.2022) எடப்பாடி கே. பழனிசாமி தேர்வு செய்யப் பட்டிருக்கிறார். அடுத்தடுத்த நகர்வுகளில் திண்டுக்கல் சீனிவாசன் கட்சியின் பொருளாளராக தேர்வாகியிருக்கிறார். பொதுக்குழு நடத்தலாமா வேண்டாமா என்ற கேள்விக்கான விடையை அதே நாள் (11.07.2022) காலை 9 மணியளவில் தெரிவிப்பதாக நீதிமன்றம் சொல்லியிருந்தது. நீதிமன்றம் சொல்லுகிற ‘நல்ல’ பதிலுக்காகக் காத்திருந்து, நல்ல பதில் கிடைத்ததும் பொதுக்குழுவை கூட்டிவிட்டார் இபிஎஸ். இன்னொரு பக்கம், ஒன்பது மணிக்கு முன்பே, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் வந்து விட்டார். அப்போதுதான் அங்கே வன்முறை வெடித்தது. கற்களாலும் ஆயுதங்களாலும் தாக்குதல் சம்பவம் அரங்கேறியது.

ஓபிஎஸ் கேரவன் வாகனத்தில் தலைமை கழகம் வந்து இறங்கியதும், கட்சி அலுவலகத்தில் தொங்கிக்கொண்டிருந்த பூட்டை சிலர் உடைக்கத் தொடங்கினர். உள்ளே நுழைந்ததும் அங்கு தென்பட்ட இபிஎஸ் புகைப்படங்களை உடைத்து வீசியில் எரிந்தனர். தயாராய் கையில் வைத்திருந்த ஓபிஎஸ் படங்களை பல இடங்களில் மாட்டிவிட்டு, ’ஒரே தலைவர் அய்யா ஓபிஎஸ் வாழ்க’ என்று கோஷம் எழுப்பினர்.

கலவரம் பெரிதாய் வெடிக்கத் தொடங்கியதை அடுத்து போலீசார் அங்கு வந்தனர். முதற்கட்டமாக கலவரக்காரர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். அதை தடியடி என்று கூட சொல்ல முடியாது. லேசான விரட்டல் என்றுதான் சொல்லவேண்டும், மிகவும் மென்மையான போக்கையே போலீசார் கடைபிடித்தனர். அதன் விளைவுதானோ என்னவோ, போலீசார் சிலருக்கு கலவரக்காரர்களின் கல்வீச்சில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

வருவாய்த்துறை (ஆர்டிஓ) அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் சம்பவ இடத்துக்கு வந்து அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்தார். சட்டம் ஒழுங்கு பெரிய அளவில் சீர்கெட்டுப் போகாமல் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது. சீல் வைப்பு விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாக விவாதிக்கப் பட்டாலும், அப்படிப்பட்ட கலவரசூழலில் ஆளுங்கட்சியால் வேறெந்த முடிவையும் எடுக்கமுடியாது என்பதே உண்மை. சிலர், ’முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிண்டு முடிகிறார்’ என்று சொல்லியிருந்ததையும் கவனித்தேன். கலவரசூழலை தடுக்காமல் அப்படியே விட்டுவைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், இன்னும் நூறுபேர் படுகாயம் அடைந்திருப்பர், உயிர்பலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் இருந்தது என்பதே உண்மை. இதே புறம்பேச்சு வாய்கள் அப்போது என்ன பேசும் ?

மேலும் அதிமுக தலைமை அலுவலகம் உள்ள பகுதி, அதிகளவில் மக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்புப் பகுதி. இப்படியொரு கலவரம் நடந்து கொண்டிருப்பதை உணராமல் பள்ளிப்பிள்ளைகளோ, முதியோர்களோ அந்த சாலையில் வந்திருந்தால் அவர்கள் நிலைமை என்னாயிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. ஒரேநேரத்தில் இரண்டு பேருந்துகள் போகிற அளவுக்கு அது (அவ்வை சண்முகம் சாலை) பெரிய சாலையும் அல்ல.

யார் -யாருக்கு துரோகம் செய்தது என்பதை அடிமட்டத் தொண்டன் சீர்தூக்கிப் பார்த்து புரிந்து கொள்ளட்டும். கட்சியும் கொடியும் சின்னமும் யாருக்கு உரிமை என்பதை தேர்தல் ஆணையமும் சட்ட ஷரத்துக்களும் சொல்லட்டும். இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதியோடு ஜெ.ஜெயலலிதா ஒப்படைத்து விட்டுப் போன கட்சிக்கு இப்படியொரு நிலைமை உண்டானது ஏன் என்பதையும் அதே தொண்டனே முடிவெடுத்துக் கொள்ளட்டும்.

இன்னொன்றை இங்கே சொல்லியே ஆகவேண்டும்…
ஊடகங்களிலும், ‘டிபேட்’ டுகளிலும் கடந்த சில மாதங்களாக வெளியாகிக் கொண்டிருக்கும் காட்சிகளை மக்கள் உற்று கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாய், வாதங்களை முன் வைக்கும் சமூகசேவகர், பத்திரிகையாளர், மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர், எழுத்தாளர் -என்ற அடையாளங்களுடன் வெளிப்படும் குரல்களை மக்கள் கவனிக்கிறார்கள். சோஷியல் மீடியாக்களின் வளமை இன்று பிரமாண்ட அளவில் இருக்கிறது. நேற்று சொன்னதை இன்று மாற்றும் போது, நேற்று சொன்ன – எழுதிய அனைத்தையும் மொத்தமாய் கொண்டு வந்து கண்முன் பொதுவெளியில் வைத்து கேள்வி எழுப்பும் அளவுக்கு அது பிரகாசமாகவே இருக்கிறது !

-ந.பா.சேதுராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *