இந்தியா, இலங்கை, மாலத்தீவு, கடாரம், மலேசியா, சிங்கப்பூர், சுமத்ரா, கம்போடியா, இந்தோனோசியா, மியான்மர், வங்கதேசம் என பாதி உலகை வெற்றிகொண்ட (தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன்) கடாரம் கொண்டான், ராஜேந்திர சோழனின் சமாதி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா, பிரம்மதேசம் என்ற சிறு கிராமத்தில், ஒரு தனியார் கழனியில் மண்மேடாக கிடக்கிறது.
தனது ஆட்சியில் பிராமணர்களுக்கு பல ஏக்கர் நிலங்களை தானம் செய்தவர் ராஜேந்திர சோழன் என்கிற கல்வெட்டு சாட்சியங்கள், நிறையவே இருக்கிறது . பிரம்ம தேசமும் (இதுவும் ஒரு சதுர் வேத மங்கலம்தான்) பிராமணர்களுக்கு ராஜேந்திரசோழ மன்னனால் தானமாக அளிக்கப்பட்ட ஊர்தான். ராஜேந்திரசோழ மன்னனின் சமாதி என்றறியப்படும் பகுதி இப்போது தனியார் பட்டா நிலத்தில் ஒரு மண்மேடாக காட்சிக்கு இருக்கிறது. அங்கு ஒரே ஒரு விளக்கு (பல்பு) பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது.
அருகில் உள்ள பம்பு செட் விவசாய நிலத்தில் இருந்து, ’பம்புசெட்’ விவசாயிக்கு கிடைத்த இலவச மின்சாரத்தில், மாமன்னன் ராஜேந்திரனுக்கு (ம்) கொஞ்சம் போகிறது என்று இலவச மின்சாரம். சமாதிக்கு கிழக்கே 200-ஆவது மீட்டரில் ஒரு புளியந்தோப்பு.
பிரம்மதேசம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை இணைத்து ஆட்சி செய்து வந்த (கல்கியின் கதையை வாசியுங்கள்) வந்தியத்தேவன், அவர் மனைவியும் அத்தை முறையுமான குந்தவை (ம) பக்கத்தில் அரசாட்சி செய்துவந்த சகோதரியான இரண்டாம் குந்தவை, அவரது கணவர் ஆகியோரைப் பார்க்கவந்த மாமன்னன் ராஜேந்திரசோழன் நோய்வாய்ப்பட்டு பிரம்மதேசத்தில் உயிரிழந்துள்ளார்.
மன்னன் ராஜேந்திரசோழனின் மூன்று மனைவிகளில் ஒருவர் வீரமாதேவி. மன்னன் இறப்புத் தகவல் அறிந்ததும், பழையாறு பகுதியில் இருந்து பயணப்பட்டு வந்தவாசி, தெள்ளாறு வழியாக வந்து பிரம்மதேசத்தில் மன்னன் ராஜேந்திரசோழனின் உடல் இருந்த இடத்துக்கு நேரெதிரே மாந்தோப்பு பகுதியில் வீரமாதேவி இன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிகிறது.
சிமெண்ட் ஷீட் டால் மூடப்பட்டு மாட்டுக்கொட்டகைபோல் இருக்கும் (புகைப்படம்) இடம்தான் வீரமாதேவி உயிர்நீத்த (உடன்கட்டை) இடம்.
மன்னன் ராஜேந்திரசோழனின் சமாதிக்கு எதிரே ஒரு கிலோமீட்டர் தூரத்தில், வீரமாதேவியின் வீரமரணத்தை கல்வெட்டில் தாங்கி நிற்கிறது, (படம்) தஞ்சை பெரு உடையார் கோவிலின் மாதிரியில் அமைந்த சந்திரமவுலீஸ்வரர் சிவாலயம். கிராமதேவதை கோவிலில் மேற்கொள்ளக் கூடிய அளவில்கூட பராமரிப்பு இல்லாத ஒரு சூழ்நிலையே இங்கு காணப்படுகிறது.
இருபது வயதுக்குள் 25 உலகநாடுகளை தனதாக்கிக் கொண்டு 32 வயதில் வாழ்க்கையை காய்ச்சலில் தொலைத்த மாசிடோனிய மாவீரன் (கி.மு 323) அலெக்ஸாண்டர் போல, மாமன்னன் ராஜேந்திர சோழனின் வாழ்க்கையும் காய்ச்சலில்தான் முடிந்தது என்பது சோகமான ஒற்றுமை.
சில படையெடுப்புகளில் குறிவைத்து தாக்கப்பட்ட சிவாலயங்களில் ஒன்றாக சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயிலும் இருந்துள்ளது. பாதுகாப்பாக மிகபெரும் மண்மேட்டில் அப்போது மறைக்கப்பட்ட சந்திரமவுலீஸ்வரர் கோயில், பின்னாளில் கண்டெடுக்கப்பட்டு ராஜேந்திர சோழனின் சரித்திரத்தை மவுன மொழியில் கூறிக்கொண்டிருக்கிறது. சோழர் வரலாற்றை கதைகதையாக எழுதிய கல்கி முதல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேந்திரன் வரை கொஞ்சம் அக்கரை காட்டியிருந்தால் இந்த சரித்திர நாயகன் சமாதியும், கோவிலும் சீர் பெற்றிருக்கும்.
தனக்கான அடக்கத்தலம் (சுடுகாடு) கூட தனியாக இல்லாமல், தனியார் விவசாய நிலத்தில், அரசின் இலவச மின்சாரத்தின் ஒற்றை பல்பு வெளிச்சத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் நினைவிடம் அடையாளமாய்க் கிடக்கிறது…
மாமன்னன் ராஜேந்திர சோழனிடம் தானமாக பெற்ற நிலத்துக்காரர்கள், அந்த – அடையாளம் தொலைத்த நினைவிடம் அருகே மாட மாளிகைகளில், ஒளி பொருந்திய விளக்குகளின் வெளிச்சத்தில்…
கொடுத்தவன் இருளில்…
பெற்றவன் ஒளியில்…
இதுதான் காலத்தின் சிரிப்போ? கட்டுரையாளர் : வந்தவாசி எம்.பத்மநாபன்