பென்சன்தாரர் நேரில் போகாமல் வாழ்நாள் சான்று பெற இதுதான் வழி!

பென்சன்தாரர்கள் (ஓய்வூதியர்கள்) நேரில் வராமலே அவர்களுக்கான வாழ்நாள் சான்றினை (Life certificate) வெப் சைட் (இணையதளம்) மூலம் அளிக்கும் நடைமுறை அஞ்சல்துறை வாயிலாக கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சியை இந்தப் பதிவில் காணலாம்.

ஓய்வூதியதாரர்களுக்கான வருடாந்திர நேர் காணல் (ம) வாழ்நாள் சான்றிதழ்களை அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. அதுபற்றிய விபரம் : தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் (ம) குடும்ப ஓய்வூதியர்களை ஆண்டு தோறும், மாவட்ட கருவூலத்திற்கு வரவழைத்து நேர்காணல் செய்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக (கொரோனா பரவல் காரணத்தால்) நேர் காணல் நடக்கவில்லை. இந்நிலையில்தான், ஓய்வூதியர்கள் அவர்தம் விருப்பப்படி நேர்காணல் நடைமுறையை நிறைவு செய்ய வழி வகை செய்யப் பட்டுள்ளது. அதன்படி
‘ஜீவன் பிரமான் இணைய தளம்’ மூலம் ஓய்வூதியர்கள், தங்கள் ‘மின்னணு வாழ்நாள் சான்று’ (Life Certificate) பெற- ஒப்படைக்க முடியும். இந்திய அஞ்சல்துறை வங்கி சேவையைப் பயன்படுத்தி ஓய்வூதியர் (பென் ஷனர்) கள், வாழ்விடத்தில் இருந்தபடியே அஞ்சலக ஊழியர்கள் (போஸ்ட்மேன்) மூலம், இந்த சேவையை எளிதில் பெறமுடியும்.

வீட்டில் இருந்தபடியே போஸ்ட்மேன் மூலம் ரூ.70ஐ கட்டணமாக செலுத்தி ‘மின்னணு வாழ்நாள் சான்று’ பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். அரசு இ-சேவா மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றை பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம்.

ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும், விரல்ரேகை குறியீட்டு கருவியை (Bio- metric Device) பயன்படுத்தி ‘மின்னணு வாழ்நாள் சான்று’ பதிவு செய்து கொள்ளலாம். ‘ஜீவன் பிரமான் முகம் (Face identity Register) பதிவு செயலி’ பயன்படுத்தியும் வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்று பெறமுடியும்.

மின்னணு வாழ்நாள் சான்று பெற ஆதார் எண், ப்பி.ப்பி.ஓ. (P.P.O) எண், வங்கிக் கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலக விபரங்கள் அப்போது அவசியம் தேவை.

அரசாங்கத்தின் வாழ்நாள் சான்றளிப்பைப் பெறுதற்கு www.tn.gov.in/karuvoolam/ என்ற Web Site (இணையதளம்) மூலம் டவுன்லோடு (பதிவிறக்கம்) செய்து, ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர், அரசிதழ் பதிவு பெற்ற (கெஸட்டட் ரேங்க்) மாநில -மத்திய அரசு அலுவலர், வட்டாட்சியர் (அ) துணை வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் – போன்ற தகுதியில் உள்ளோர் ஒருவரிடம் கையெழுத்து (சான்றொப்பம்) பெற்ற பின் தபாலில் அதை சம்மந்தப்பட்ட கருவூலத்துக்கு அனுப்பி(யும்) நேர்காணலுக்கு வகை செய்யலாம்.

வெளிநாடு வாழ் ஓய்வூதியர் (பென்ஷனர்)கள், இந்திய தூதரக (எம்பஸி ஆபீசர்) அலுவலர், மாஜிஸ்திரேட் அல்லது நோட்டரி பப்ளிக் அலுவலர் இவர்களில் ஒருவரிடம் வாழ்நாள் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்பலாம்.
நேரடி நேர்காணலுக்கு செல்ல விரும்பினால், ஓய்வூதிய (பென்ஷன் புக்) புத்தகத்துடன் அரசு வேலை நாள்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கருவூலத்துக்கு செல்லலாம்.

மேலதிக விபரம் பெற : dt a.tn@nic.in – மின்னஞ்சல் (அ) 1800 599 5100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு மின்வாரியம், ரயில்வே, அஞ்சல்துறை, தொழிலாளர் வைப்பு நிதித்திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது ! – இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ந.பா.சே

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *