பிரதமர் மோடி வருகையும் மக்களின் எதிர்பார்ப்பும்!

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு, நேற்று வருகை தந்து பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி விழாவில் பங்கேற்று பேசினர்.

பிரதமர் மோடி பேச்சின் சுருக்கம் : தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தைக் கொண்டாடவே நாம் இங்கு திரண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புக்கான ரூ.31,500 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புகளையும், தற்சார்பு நிலை நோக்கிய உறுதிபாட்டையும் இந்தத் திட்டங்கள் ஊக்கப்படுத்தும். இதுவரை வாழ்ந்த வாழ்க்கைத் தரத்தை விட சிறப்பான ஒரு வாழ்க்கைத்தரத்தை எதிர்கால சந்ததியினர், நம் குழந்தைகள் எட்ட வேண்டும் என்றே அனைவரும் விரும்புவீர்கள். அதைத்தான் இந்த அரசு செய்து கொடுத்திருக்கிறது.

பாஜகவினர்

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்த நாடுகள் வளரும் நாடுகள் என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன என்பதுதான் வரலாறு. ஒவ்வொரு வீட்டுக்கும் தரமான குடிநீர் என்ற அடிப்படை வசதியை உறுதி செய்ய, பாரபட்சம் இன்றி பணியாற்றி வருகிறோம்.
நாட்டில் மின்சாரம், நீர் மட்டுமல்ல எரிவாயு குழாய் வலைப்பின்னல் விரிவாக்கம் கருதியும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அதிவேக இணையத்தை நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு செல்வதே எங்கள் தொலைநோக்கு பார்வை.
வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கு உயர்தரமான கட்டமைப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும், அனைத்து அமைச்சகங்களையும் இந்த திட்டம் ஒருங்கிணைக்கும். செங்கோட்டையில் இருந்து தேசிய கட்டமைப்பு குழாய் பற்றி பேசியிருந்தேன். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.100 லட்சம் கோடிக்கும் மேற்பட்டது. இந்த தொலைநோக்கை மெய்ப்படுத்துவதை நோக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறது. செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு புதிய வளாகம் ஒன்று 2022- ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய வளாகத்துக்கு முழுக்க முழுக்க மத்திய அரசே, நிதி வழங்குகிறது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்புகளுக்காக சுப்பிரமணிய பாரதியார் பெயரில் ஒரு இருக்கை சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு பிரதமர் பேசினார்.

முதல்வரை வரவேற்க காத்திருப்பு
முதல்வர் ஸ்டாலினை சாலையில் வரவேற்கும் எம்எல்ஏ கே.பி.சங்கர்.

தமிழ்நாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்பதில் பாஜகவினர் நேற்று மிகுந்த ஆர்வம் காட்டினர். வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் திரண்டனர். கைகளில் கொடிகளுடன் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளின் இருபுறமும் நின்றிருந்தனர். பல இடங்களில் நாட்டிய நிகழ்ச்சிகளையும் சாலை ஓரங்களில் நடத்திக் கொண்டிருந்தனர். அதேபோல் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க திமுக தொண்டர்கள், கருப்பு -சிவப்பு வண்ணக்கொடியுடன் திரண்டனர். திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் மற்றும் அவருடன் வந்திருந்த பெரிய திரள், நம்முடைய கண்ணில் பட்டது. தளபதி, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் என்ற கோஷமும், பாரதப் பிரதமர் மோடிஜீ வாழ்க என்ற கோஷமும் இரண்டு பக்கமும் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது.
தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சி, மோடி வருகையினால் மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே, மக்களின் விருப்பமும் நமது எண்ணமும் !
பிரீத்தி எஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *