உள்ளாட்சிமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளிலும் – சுயேச்சைகளிலும் உள்ள நண்பர்களுக்கு வாழ்த்துகள் ! அதேபோல் தோல்வியைத் தழுவியோருக்கு எம் ஆறுதலும் – தேறுதலும் ! வென்றவர்கள் நிதானத்துடனும் நேர்மையுடனும் செயல்பட்டு அடுத்த தேர்தலுக்கான வெற்றியை நோக்கி நகருங்கள். தோற்றவர்கள் கவலையோடு ஒதுங்கி நிற்காமல் மக்களுக்கு இன்னும் இணக்கமாக செல்வது எப்படி என்கிற எண்ணத்தோடு முன்னேறுங்கள். கூட்டணியில் இருந்து கொண்டே உறவுகளையும், பினாமிகளையும், போட்டி வேட்பாளராக களத்தில் இறக்கியவர்களை, தலைமை அடையாளம் கண்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் ! பெண்கள் வார்டாக மாறிய பெரும்பாலான வார்டுகளின் வெற்றியாளர்களில் பலர், நேரடி அரசியலில் இருந்தவர்கள் இல்லை… அவர்கள், கணவரோ அல்லது அண்ணனோ பரிந்துரைத்து வெற்றிவாகை சூடியவர்களே… எதிர்காலத்தில் கணவரோ அண்ணனோ பிற உறவுகளோ உங்கள் அதிகாரத்தில் மறைமுகமாகவோ நேரடியாகவோ அதிகாரம் செலுத்த அனுமதிக்காதீர்கள்! நீங்கள் நீங்களாக இருங்கள். மாமன்ற, நகரமன்ற, ஊராட்சி – பேரூராட்சி மன்ற உறுப்பினருக்கான அதிகாரம் அறிந்திருங்கள். தலைவர்- துணைத்தலைவர் அதிகாரம் உணருங்கள். மாநகரின் தந்தைதான் மேயர் பதவி என்பதை முழுமையாக அறிந்துணர்ந்து மக்களை பிள்ளை போல் நடத்தும் எண்ணத்தை மனதில் விதையுங்கள்… சொல்ல வேறொன்றுமில்லை, அனைவருக்கும் எதிர்காலம் சிறக்க எம் வாழ்த்துகள்…
ந.பா.சேதுராமன் 22.02.2022