சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் அலாவுதீன். இவரது மகன்கள் முகம்மது அஜீஸ் மற்றும் ஜாகிர் உசேன். நேற்றிரவு முகம்மது அஜீஸ், ஜாகீர் உசேன் இருவரையும் காரில் சிலர் கடத்திச் சென்றுள்ளனர். கொடுங்கையூர் போலீசில் இது குறித்து அலாவுதீனின் மனைவி தாம் பூரான் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர். கடத்தப்பட்ட இடத்திலிருந்தும் முக்கிய சாலை மார்க்கத்திலிருந்தும் சிசிடிவி கேமராப் பதிவுகளை கைப்பற்றினர். இதற்கிடையில் கடத்தப்பட்ட இருவரையும் விடுவிக்க 20 லட்ச ரூபாய் பணம் தரவேண்டும் என்று அலாவுதீனின் மனைவி தாம்பூரனின் செல்போனில் கடத்தல் கும்பல் தொடர்பு கொண்டு பேசியது. செல்போன் டவர் ஆய்வில் மணலி பகுதியை அது சொன்னது. போலீசார் மணலி விரைந்தனர். அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த கடத்தப்பட்ட முகமது அஜீஸ், ஜாகிர் உசேன் இருவரையும் கடத்தல் கும்பலின் பிடியிலிருந்து போலீசார் மீட்டனர். கடத்தல் விவகாரத்தில் இறங்கிய மணலி ரஞ்சித், செங்குன்றம் சந்தோஷ், பெரியசேக்காடு பாலமுருகன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், “கடத்தப்பட்டவர்களின் அப்பா அலாவுதீன், போதைப் பொருளை கைமாற்றும் இடைத் தரகராக இருப்பவர். அதில் லட்சக்கணக்கில் சம்பாதிப்பது தெரிந்துதான், அவருடைய இரண்டு மகன்களையும் கடத்தி வைத்துக் கொண்டு பணம் பறிக்க முயன்றோம்” என்று பிடிபட்டவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் மூவரும் ஆஜர்படுத்தப்பட்ட பின் சென்னை மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். போதைப் பொருளை புழக்கத்தில் விட்டதாகவும் போதைப்பொருளை விற்றவர்களோடு தொடர்பில் இருந்த குற்றத்துக்காகவும் அலாவுதீனை வண்ணாரப் பேட்டை போலீசார் ஏற்கெனவே தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது. கின்றனர். ஒரு கடத்தல் வழக்கில் நுழைந்தால் அது போதைப்பொருள் கடத்தல் விவகாரம் வரையில் நூல் பிடித்துப் போகிறது. இந்த விவகாரம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
– தேனீஸ்வரன் க்ரைம் –