போக்ஸோ சட்டம்
சொல்வது என்ன ?
(1) கிணறு, குளம் போன்ற நீர் நிலைகளில் மூழ்கியோ, சாலை விபத்திலோ இறக்கும் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் உடலையோ, அவர்களை அடையாளப் படுத்தும் புகைப் படத்தையோ, சம்பந்தப்பட்ட குழந்தையின் உடன்பிறந்த பிற குழந்தைகளையோ அச்சு- காட்சி, டிஜிட்டல், சமூக ஊடகம் என எதில் வெளிப்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம் !
(2) காவல்துறையின் அறிவுறுத்தல் அல்லது வேண்டுகோள் படியே காணாமல் போன சிறார்களின் புகைப்படங்களை தேடுதல் பொருட்டு வெளியிடலாம். அதே வேளையில், காவல் துறையின் பரிந்துரை கடிதமானது, வெளியிடுவோர் கைகளில் கட்டாயம் ஆதாரமாய் இருக்க வேண்டும் !
(3) கொடுமையான தொற்று நோயால் குழந்தைகள் தாக்குண்டு இறந்தாலும், அந்தக் குழந்தைகளின் புகைப் படத்தையோ, உடலையோ, அவர்களை அடையாளப் படுத்தும் புகைப் படத்தையோ, சம்பந்தப்பட்ட குழந்தையின் உடன் பிறந்த பிற குழந்தைகளையோ அச்சு- காட்சி, டிஜிட்டல், சமூக ஊடகம் எதிலும் வெளியிடக் கூடாது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகக் குறிப்பிட்ட மாவட்ட, நகர, தாலுகா அடையாளத்தை மட்டும், (நோய் தாக்குதல் குறித்த எச்சரிக்கை பொருட்டு) காட்டலாம். குழந்தையின் வீட்டை காட்டக் கூடாது, குழந்தையின் உடன் பிறந்த குழந்தைகள் இருக்குமானால் குழந்தையின் பெற்றோர் முகத்தையும் கூடக் காட்டக் கூடாது.
(4) ஊடகத் துறைக்குப் புதியவர்கள், பயிற்சி நிருபர்கள், ஆர்வத்தின் காரணமாக சிறார் சீர்திருத்தப் (கூர்நோக்குப் பள்ளி) பள்ளிகளை விஷூவலாகப் படம் பிடித்தல், போட்டோ எடுத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், தண்டனைக்குரிய குற்றமே. அதே போல், கூர் நோக்குப் பள்ளிகளில் இருந்து சிறார்கள் தப்பி ஓடியதாக வரும் செய்தியில் எண்ணிக்கை மட்டுமே போட வேண்டும், சிறார்களின் பெயரைப் போடக் கூடாது. தப்பி ஓடிய சிறார்களை காவல் அதிகாரிகள் பிடித்து அவர்களை ரெயில் மூலமோ, பேருந்து மூலமோ மொத்தமாக அழைத்துக் கொண்டு வரும் காட்சியை விஷூவலாக எடுக்கக் கூடாது, புகைப்படமும் பிடிக்கக் கூடாது !
விசாரணை, தண்டனை, புகைப்படங்களை
வெளியிடல் குறித்த விளக்கம் !
பாலின வித்தியாசமின்றி, 18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளையும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக போக்ஸோ சட்டம் 2012-ல் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றத்தைப் பொறுத்தவரை, குற்றம் குறித்து, மனுதாரர் (ப்ராசிகியூஷன்) தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. குற்றவாளிதான், தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும். பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக் கூடாது என்று இந்தச் சட்டப் பிரிவில் அழுத்தமாக சொல்லப் பட்டிருக்கிறது. காவல் துறையும் வெளியிடக் கூடாது என்பது முக்கியமான ஒன்று !
மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10-ஆம் தேதியும், மக்களவையில் அதே மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப் பட்டு, அரசிதழில் அறிவிக்கை வெளியிடப் பட்டது. குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தில் அதிகபட்ச தண்டனை ஆயுள் என்ற ஷரத்தில் மாற்றம் கொண்டு வந்து மரண தண்டனை என்ற சட்டத் திருத்தமாக மத்திய அரசு, அவசரச் சட்டமும் கொண்டு வந்துள்ளது. வயது வரம்பும் 18 என்பதில் இருந்து 16 மற்றும் 12 என இரு வகையினமாகப் வகைப் படுத்தப்பட்டு பிரிவுகள் சேர்க்கப் பட்டுள்ளது.
போக்ஸோ சட்டப் பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினால் குறைந்த பட்ச தண்டனை 7 ஆண்டு, அதிகபட்சத் தண்டனையாக ஆயுள் தண்டனையுடன் கூடிய அபராதமும் விதிக்கப்படும்.
சட்டப் பிரிவு 5 மற்றும் 6 -ன் படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறையும், அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டணையுடன் அபராதமும் விதிக்கப்படும்.
சட்டப் பிரிவு 7 மற்றும் 8-ன் படி குழந்தைகளை அவர்களின் அந்தரங்க இடங்களைத் தொடுவது, மற்றவரின் அந்தரங்க அந்தரங்க இடங்களைக் கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம். பாலியல் சீண்டல் குற்றமான இதற்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை, அதிகபட்சமாக 8 ஆண்டு சிறையுடன் அபராதமும் உண்டு.
சட்டப் பிரிவு 9 மற்றும் 10-ன் படி பாலியல் சீண்டல் குற்றத்தில் ஈடுபட்டோர், குழந்தையின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல் துறை அதிகாரியாக இருந்தால் குறைந்த பட்சம் 5 ஆண்டு சிறையும் அதிக பட்சமாக 7 ஆண்டு சிறை- அபராதமும் உண்டு.
சட்டப் பிரிவு 11 மற்றும் 12-ன் படி குழந்தைகளை பாலியல் ரீதியாக செய்கைகள் காட்டுவது, தொலைபேசி, அலை பேசியில் ஆபாசமாகப் பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைக்கும் குற்றத்துக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் 3 ஆண்டுகள் .
சட்டப் பிரிவு 13 மற்றும் 14-ன் படி குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை எடுப்பது, விற்பது, தயாரிப்பது, மற்றவருக்கு கொடுப்பது, குற்றம். இணைய தளம், கணிணி என, அது எந்த தொழில்நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே. குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சிறை, அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை- அபராதமும் விதிக்கப்படும்.
சட்டப்பிரிவு 18-ன் படி குழந்தைகளைப் பாலியல் குற்றங்களுக்கு ஈடுபடுத்த முயன்றால் ஓராண்டு சிறை மற்றும் அபராதமும் விதிக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றமே, குற்றம் செய்தவருக்கு வழங்கப்படும் பிரிவுகளிலேயே அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும்.
சட்டப்பிரிவு 21-ன் படி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத்தை மறைத்தாலும் குற்றம். இதற்கு 6 மாத சிறை தண்டனை இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.
சிறப்பு நீதிமன்றங்கள் இதற்காக நிறுவப் பட வேண்டும். வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று சட்டம் கூறுகிறது. உதாரணமாக, “பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கும் மேற்பட்ட பதவித் தகுதி கொண்ட பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும்.
அப்போது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது.”இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மருத்துவப் பரிசோதனை, பெற்றோர், உற்றோரின் முன்னிலையில் செய்யப் படவேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேரும் போது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது. வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக் கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும். விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப் பட்ட சிறுமி -சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்லச் சொல்லி, விசாரணையாளர்கள் வற்புறுத்தக் கூடாது.குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளை குழந்தைகளிடம் கேட்கக் கூடாது.
இப்படி அடுக்கடுக்காக போக்ஸோ சட்டம் குறித்த சட்டக் கருத்துகள் நடைமுறையில் இருப்பதை கவனத்தில் கொள்வோம்…
(இன்னும் விரிவான தகவல்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்!)
- ந.பா.சேதுராமன்
