உள்ளாட்சி தேர்தலின் (2022) போது, சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மது போதையில் வந்த ஒருவர் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் தகராறு செய்தும், காவலரின் தாயார் குறித்தும் அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் இருந்த காரணத்தால் ரகளையில் ஈடுபட்டவரோடு வாக்குவாதம் செய்யாமல் போலீசார் அமைதி காத்தனர். அதேவேளையில் அங்கு நடந்ததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட அது வைரலானது. காவல் உயரதிகாரிகள் கவனத்துக்கும் அந்த வீடியோ சென்று சேர்ந்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில்
ரகளையில் ஈடுபட்டவர், அதே பகுதியை சேர்ந்த அப்பு @ முனியசாமி என தெரிய வந்தது. தனிப்படை போலீசார் முனியசாமியை தேடிச் சென்ற போது அவர் குடும்பத்துடன் பாண்டிச்சேரியில் தலைமறைவானது தெரிய வந்தது. அடுத்தகட்டமாக விசாரணை தீவிரமாக முடுக்கி விடப்பட்டது. தனிப்படை போலீசார் பாண்டிச்சேரிக்கே நேரடியாக சென்று முனியசாமியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர் மீது (353, 294(b), 354D, 506 (2) ipc, 4 of tnpwha,131 and 132 of representation of peoples act 1951) வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட உயர் அதிகாரிளுக்கும், மாதவரம் காவல் துணை ஆணையர் (பொறுப்பு வண்ணாரப் பேட்டை) அவர்களுக்கும் தேர்தல் டியூட்டியின் போது அவமானப்படுத்தப்பட்ட போலீசார் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
-விகடகவி எஸ். கந்தசாமி.