பங்களாதேஷில் நடைபெற்ற ‘பனை’ வாழ்வியல் பயிற்சி முகாம்- கருத்தரங்கு !

தமிழ்நாட்டு அரசின் மரமான பனையும் அது சார்ந்த வாழ்வியலான பனையாண்மை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வண்ணம் முகாமும் பயிற்சிப் பட்டறையும் சிறப்பாக நடைபெற்றது. பங்காளதேச நாட்டின் சிட்டகாங் நகரில் அமைந்துள்ள பன்னாட்டுப் பெண்களுக்கான ஆசிய பல்கலையில், ஆசிய அளவிலான பனையாண்மை கண்காட்சி (ம) பயிற்சிப் பட்டறை நடந்தது.
பனை சார் வாழ்வியலை மீட்டுருவாக்க மேம்பாட்டையும், பனையாண்மை கருத்தியலை விரிவுபடுத்தியும், நெல்லை மாவட்டம் கடையத்தை சேர்ந்த பனை மற்றும் சூழலியல் அறிஞர் பேராசிரியர் பாமோ திறம்பட பணியாற்றி வருகிறார். பெண்களுக்கான ஆசியப் பல்கலைகழகத்தில் வேதியியல் பேராசிரியராக பேராசிரியர் பாமோ பணியாற்றி வருகிறார். தற்சார்பு மற்றும் நிலைத்த நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் ஆசியப் பனையின் பங்கு குறித்து உலகளவில் கொண்டு செல்வதே பேராசிரியர் பாமோவின் மையப்புள்ளி எனலாம். ஆசிய நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 140 பனை சார் உணவு மற்றும் உணவிலிப் பொருட்கள் நிகழ்ச்சியின் போது கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இலங்கை, இந்தியா பங்களாதேஷ் , பர்மா , தாய்லாந்து, லாவோஸ் , கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, ஈஸ்ட் திமோர் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பனை பற்றிய பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும் பதாகை (பேனர்) விளக்க காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. ஆய்வு மாணவிகள் கிறிஸ்டின் மற்றும் பயசா ஆகியோர் உருவாக்கியிருந்த “பனைவீரர் மற்றும் பனையாண்மை”என்ற இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டன . பேராசிரியர் பாமோ மற்றும் ஆய்வு மாணவி கிறிஸ்டின் ஆய்வுரையாற்றினர் . அவர்களின் கருத்திலிருந்து: ‘அடி முதல் நுனி வரை பயன்படும் பனையின் எண்ணிக்கையும் பனை சார் வாழ்வியலான பனையாண்மை புரிவோர் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து வருவது சுழலியலுக்கு உகந்ததல்ல. பனைமரம் பயன்மரம் என்பதோடு தனித்தன்மை மிக்க சுழற் தொகுதியாக விளங்கி பல நுண்ணுயிர்கள், தாவரங்கள் , பறவைகள், ஊர்வன, விலங்குகளுக்கு உயிர்க் காற்றாகவும், உயிர்நீர் , உணவு உறைவிட மருந்தாகவும் விளங்குகிறது. சூழலியலைக் கெடுக்கும் பல வேதி படிமங்களுக்கு மாற்றாகவும், சூழலியலுக்கு உகந்ததாகவும் விளங்குவதும் பனையோலை நார் பொருட்களே என்பது தெள்ளத் தெளிவு. இதன் மூலம் சூழலியலுக்கு உகந்த பல தொழில்களை தொடங்கவும் அது சார்ந்த வேலை வாய்ப்பையும் பெருக்கலாம். அக்கறை என்ற பெயரில் தண்ணீர் விட்டு உரம் போட்டு மருந்தடித்து வளர்க்கப்படாத பனைமரத்தின் கலப்படமற்ற நேரடி பனை உணவுகளான பனம்பால் ஆன- கள், சுண்ணாம்பிட்ட பதநீர் (இதிலிருந்து உருவாக்கப்படும் பனம்பாணி, கருப்பட்டி , கற்கண்டு) நுங்கு, பனம் பழம் (இதிலிருந்து உருவாக்கப்படும் பானாட்டு, பனம்பழ பானம் ), தவுண், பனங்கிழங்கு (ஒடியல் மா, புழுக்கொடியல் ), குருத்து, ஆகியன உடலை உறுதியாக்குவதோடு நோய்களை தவிர்க்கவும் எதிர்க்கவும் உதவுகின்றன. மருத்துவ பண்பும் ஊட்டமிக்கதுமான உணவாக இவைகள் உள்ளன.
பனை தற்சார்பு வாழ்வியலுக்கான மார்க்கமாக ஐ.நா.வின் நிலைத்த நீடித்த வளர்ச்சி இலக்குகளாக திட்டமிடப் பட்டுள்ள விபரங்கள் :
இலக்கு 1: வறுமை இல்லை.
இலக்கு 2: பசி இல்லை.
இலக்கு 3: மக்களுக்குச் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்க்கை.
இலக்கு 4: தரமான கல்வி.
இலக்கு 5: பாலின சமத்துவம்.
இலக்கு 6: சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்.
இலக்கு 7: மலிவான தூய்மையான எரிசக்தி.
இலக்கு 8: கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி.
இலக்கு 9: தொழிற்சாலை, கண்டுபிடிப்புகள் மற்றும் கட்டமைப்பு.
இலக்கு 10: சமத்துவ இன்மையைக் குறைத்தல்.
இலக்கு 11: நிலைபேறுள்ள நகரங்கள் மற்றும் சமுதாயங்கள்.
இலக்கு 12: பொறுப்புள்ள நுகர்வும் உற்பத்தியும்.
இலக்கு 13: தட்பவெப்பநிலை நடவடிக்கை.
இலக்கு 14: நீரின் கீழ் உயிர்கள்.
இலக்கு 15: நிலத்தில் உயிர்கள்.


நிற்க! மேற்குறிப்பிட்டவற்றை ஆகிவற்றை அடைவதிலும் சிறந்த பங்களிப்பை தரும் பனையை பாதுகாப்பது நமது தலைமுறைகளை பாதுகாக்கும் வழிமுறையாகும். அவ்வழியில் நடைபெற்ற (இந்த) பனையாண்மை கண்காட்சி மற்றும் பயிற்சிப் பட்டறை 19 நாடுகளைச் சேர்ந்த இளையோர்களிடம் பனை சார்ந்த வாழ்வியல் பொருளியல் சூழலியல் விழிப்புணர்வை உருவாக்கும் கருவியாகியுள்ளது” என்கின்றனர்.
இந்நிகழ்வில் ஏராளமான பேராசிரியர்கள், பத்தொன்பது நாடுகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்வை பேராசிரியர் பாமோ தலைமையில், பெ.ஆ.ப. அறிவியல் மற்றும் கணித நிலையம், பனையாண்மை – தற்சார்பு வாழ்வியல் மற்றும் வளம் கூட்டும் வளர்ச்சிக்கான நடுவம் , பருவகால மாற்றம் மற்றும் சூழலியல் நல அமைப்பு ஏற்பாடு செய்திருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *