சவரனுக்கு 2 ஆயிரம் எகிற வைத்த போர் !

தங்கத்தின் விலையும் கச்சா எண்ணெய்யும் றெக்கை கட்டும் அளவுக்கு ஒரே நாளில் உயருமோ என்கிற பதைபதைப்பு நிஜமாகி இருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்ததின் மூலம் பதைபதைப்பு பக்கத்தில் வந்திருக்கிறது. உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் ஐந்து இடத்தில் வருகிற ரஷ்யாவால் முதலில் ஆயில் வழி ஆபத்துதான். அடுத்தது தங்க மார்க்கெட்தான். போர் தொடங்கிய சிலமணி நேரங்களிலேயே தங்கம் விலை இந்திய மதிப்பில் சவரனுக்கு 1,856 -ரூபாய் உயர்வு என்ற தகவல் வெளியாகி விட்டது. (தங்கம் விலை ஏறிய அன்று மாலையே ஏறியதை விட மிகக் குறைவாக விலை இறங்கி விட்டது. அதற்குள் தான் மிகப்பெரிய போர் ராஜதந்திரமும் அடங்கியிருக்கிறது) சூரியகாந்தி எண்ணெய்யை பழைய விலைக்கு இனிமேல் தர வாய்ப்பில்லை, விதை (?) இனிமேல் டிமான்ட்தான் என்கிற எண்ணெய் வணிக முதலாளிகளின் கவலை (!) நுகர்வோர்களான பொது மக்களுக்கும் பெருங்கவலையை கொடுத்திருக்கிறது… இப்படி வாழ்வாதாரத்தை எல்லாவகையிலும் உக்ரைன் மீதான ரஷ்யப்போர் உண்டாக்கி விட்டிருக்கிறது. உலகளாவிய வணிகச் சந்தையும் இந்தப் போரை தங்களுக்கு சாதகமான போர்வையாக்கிக் கொண்டிருக்கிறது…
சமாதானம் மட்டும்தான் உலகத்தின் இன்றையத் தேவை என்பதை கொரோனா பெருந்தொற்றும் அதன் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார நலிவும் உலகையே ‘ஜென்’ நிலைக்கு மாற்றி விட்டிருக்கிறது. அப்படியான ஒரு தருணத்தில்தான் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியிருக்கிறது.
ஒன்றுபட்ட சோவியத் ரஷ்யாவின் குடும்பத்திலிருந்து பிரிந்து, ‘உக்ரைன்’ என்ற நாடாக அடையாளம் பெற்றுள்ள நாட்டின் மீதுதான் போர்த் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது ரஷ்யா !
ஜனவரி 2022 – இரண்டாம் வாரத்திலிருந்தே உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எந்த நேரமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 24 -2022 – அதிகாலை அது நடந்தே விட்டது.
உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து வைத்து மாதக்கணக்கில் எச்சரித்து வந்த ரஷியா, வான்வழி, கடல்வழி, தரைவழி என நடத்திய மும்முனை தாக்குதலில் கிழக்கு உக்ரைன் முழுதும் வெடி குண்டுகள் நிரம்பிக் கிடக்கிறது !

ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீட்டுக்குப் போய் குடும்பத்தைப் பாருங்கள் என்று உக்ரைன் வீரர்களைப் பார்த்து போரை நடத்தும் ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
உக்ரைனைப் பொறுத்தவரை படை பலத்திலோ எல்லை பலத்திலோ ஆட்களின் எண்ணிக்கையிலோ ரஷ்யாவோடு ஒரு வாரத்துக்கு கூட மல்லுக்கட்ட முடியாது என்பதே கள யதார்த்தம் !
ஆனாலும், ரஷியாவின் ஐந்து போர் விமானங்களையும், ஒரு ஹெலிகாப்டரையும் சுட்டு வீழ்த்தி விட்டோம் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் சொல்லிக் கொண்டிருக்கிறது. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, இன்னும் ஒருபடி மேலேபோய் ரஷியாவிடம் ஒரு போதும் தோற்க மாட்டோம், சரண் அடையவும் மாட்டோம் என்று கூறி வருகிறார்.

போர் நடக்கும் நாடுகளுக்கு அருகருகே இருப்பது லிதுவேனியா மற்றும் பெலாரஸ் ஆகிய இரண்டு சிறிய நாடுகள். நெருக்கடியான இந்த சூழலில் லிதுவேனியா நாட்டின் அதிபர் கிடானஸ் நௌசேடா, நாட்டில் ’அவசர நிலை’ யை கொண்டு வந்திருப்பதாக அறிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான ரஷ்யப் படைகளை குவித்து வைத்து உக்ரைனை தாக்குவதற்கு ஏதுவாக இருக்கும் பெலாரஸ் நாடு கையறு நிலையில் இருக்கிறது. படைகளை குவிக்க அனுமதி மறுத்தால் ரஷ்யாவின் கோபத்துக்கு ஆளாக வேண்டும், அனுமதி கொடுத்தால் ஐரோப்பிய ஒன்றியம் சில பல தடைகளை பெலாரஸ் மீது விதிக்கக் கூடும்.
பெலாரஸ் அனுமதி குறித்தும், போர் குறித்தும் ஐ.நா. வின் பார்வை என்ற இன்னொரு ட்ராக்கும் இன்று மாலை வரை எதிர்பார்ப்பில் இருந்தது – இப்போது அதுவும் இல்லை, பேசிப்பார்த்து விட்டு, ஐ.நா. அமைதியாகி விட்டது!

உக்ரைனில் இருக்கும்
தமிழ்நாட்டு மாணவர்கள்
மீட்பு – விபரம் !

தமிழ்நாட்டைச் சேர்ந்த பதினைந்தாயிரத்துக்கு குறையாத மாணவர்கள், இக்கட்டான இந்த கால கட்டத்தில் உக்ரைனில் சிக்கியுள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் குறித்த தகவல் (ம) மீட்பு, ஒருங்கிணைப்பு பொருட்டு ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம், மாநில தொடர்பு அலுவலராக ஜெசிந்தா லாசரஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர்/தலைமை உள்ளுறை ஆணையர் தொடர்பு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண். 1070. ஜெசிந்தா லாசரஸ், ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகம்- 9445869848 – 9600023645 – 9940256444- 044-28515288- உக்ரைன் அவசர உதவி மையம், தமிழ்நாடு பொதிகை இல்லம், புதுடெல்லி – வாட்ஸ்அப் எண் : 9289516716.-

– ந.பா.சேதுராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *