கேட்டதை தரும் முருகனின் சிறுவாபுரி! அலைமோதும் மக்கள் கூட்டம்…

சென்னையை அடுத்த பெரியபாளையம் வழி சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் வெளிமாவட்ட – மாநில மக்கள் குவிந்தனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு என்பதாலும் கார்த்திகை நட்சத்திரம் என்பதாலும் இன்று கூட்டம் அலை மோதுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரியபாளையம் வழி சிறுவாபுரி கிராமத்தில் அருள்மிகு பாலசுப்ரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வியாபார வளர்ச்சி, அரசியலில் உயர் பதவி, ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம், புது வீடு வாங்குதல் விற்றல் மற்றும் திருமண தடை, குழந்தைப் பேறு போன்றவற்றுக்கு மிகச்சிறந்த பரிகாரத் தலமாக செவ்வாய் உச்சம் பெற்ற இந்தத் தலம் விளங்குவதாக மக்கள் நம்புகின்றனர். தொடர்ந்து ஆறு வாரம் செவ்வாய்க் கிழமைகளில் வந்து இங்கு விளக்கேற்றி வழிபாடு நடத்தினால் வேண்டுதல் நிறைவேறும் என்பதும் பக்தர்களின் தீவிரமான நம்பிக்கை. இன்று முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை மற்றும் கார்த்திகை நட்சத்திரம் என்பதால் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சிறுவாபுரி முருகன் கோவிலில் குவிந்துள்ளனர். கோவிலின் முகப்புவாசல், காத்திருப்பு மண்டபம், விளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தும் அரச மரம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. பக்தர்கள் காத்திருக்கும் மண்டபத்தில் இருந்து வரிசையில் சென்று சுமார் 2மணி நேரத்திற்கு பின்னர் சாமி தரிசனம் முடித்து வெளியே செல்கின்றனர். கூட்டம் கூட்டமாக கார்களில் ஏராளமானோர் வந்து செல்வதால் சிறுவாபுரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

– ‘சிவத்தொண்டன்’ – பிகேஎம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *