குப்பை இல்லா நகரம் அமைப்போம் ! நீதியரசர் ஜோதிமணி பேட்டி.

குப்பை இல்லா நகரத்தை உருவாக்குவது நம்மிடம்தான் நம் கையில்தான் இருக்கிறது என்று நீதியரசர் ஜோதிமணி குறிப்பிட்டார். திருவள்ளூர் பொன்னேரி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு தலைவர் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாய தென்மண்டல கண்காணிப்பு குழுத் தலைவர் நீதியரசர் ஜோதிமணி ஆய்வுகளை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு கொண்டு வரும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதியரசர் ஜோதிமணி வலியுறுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை, தேசிய பசுமை தீர்ப்பாய தென்மண்டல கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி, நேரில் ஆய்வு செய்த பின், அங்கு நடந்து வரும் ‘பயோ மைனிங்’, உரம் தயாரிப்பு, குப்பையை பிரித்து வாங்குதல் ஆகிய பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, நகராட்சித் தலைவர் பரிமளம் விஸ்வநாதன், நகராட்சி ஆணையர் தனலட்சுமி மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடனும், ஆலோசனை நடத்தினார். அப்போது, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும், கவுன்சிலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நீதியரசர், வணிகர்களை அழைத்து நெகிழி பயன்பாட்டினை தவிர்க்குமாறும் அறிவுறுத்தினார். பிளாஸ்டிக் ஒழிப்புக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய நீதியரசர் ஜோதிமணி, “உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களிடம் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை எப்படி தனித்தனியாக பிரித்து கையாள வேண்டும் என்பதை எடுத்துரைக்க வேண்டும், அப்படி குப்பைகளை தரம் பிரித்து கையாளும் பொழுது அவைகள் மறுசுழற்சிக்கு காகிதங்கள் ஆகவும், சாலைகளாகவும் பயன்படலாம், அதன்மூலம் குப்பை இல்லா நகரம் உருவாக்கம் என்பது சாத்தியப்படும்” என தெரிவித்தார்.

– தேனீஸ்வரன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *