காஞ்சிபுரம் மாவட்டம் சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் பிரித்வி எனும் மண் ஸ்தலமாக விளங்குகிறது. உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது உற்சவத்தின் ஏழாம் நாளான(16/03/2022) நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வெண் பட்டுடுத்தி மல்லிகை, ரோஜா, சம்பங்கி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் திருத்தேர் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் வளாகத்தில் இருந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர் சங்கரமடம், பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், கச்சபேஸ்வரர் கோவில், நான்கு ராஜ வீதிகள் வழியாக வீதி உலா வந்த ஏகாம்பரநாதர் சுவாமியை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் கூடிநின்று தரிசித்தனர்.
தேரோட்டத்தின்போது சென்னை, குற்றாலம், தூத்துக்குடி பகுதிகளிலிருந்து வந்திருந்த சிவனடியார்கள் தேரின் முன்பு சிவவாத்தியங்கள் இசைக்க வேதவிற்பன்னர்கள் வேதபாராயணம் பாடியபடி தேரின் முன் சென்றனர்.
எட்டாம் நாள் குதிரை வாகனம் ஒன்பதாம் நாள் மாவடி சேவை மூன்று வெவ்வேறு சுவை கொண்ட மாம்பழம் தரும் மரத்தின் இலைகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏகாம்பரநாதர் ஏலவார் குழலியின் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தபிறகு பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படும். பின்னர் திருக்கல்யாண பெருவிழா நிறைவுபெறும். அதற்கடுத்த நாட்களில் ருத்ரகோட்டி உற்சவம், பஞ்சமூர்த்தி உற்சவம், போன்றவை நடைபெறும்.
பதின்மூன்றாம் நாள் நிகழ்வாக தீர்த்தவாரி கோயிலுக்கு அருகே உள்ள சர்வ தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி யானை உற்சவ நிகழ்வு முடிந்த பின்பு கொடி இறக்கத்துடன் பங்குனி உற்சவம் இனிதே நிறைவு பெறுகிறது
இக்கோயிலின் சிறப்பம்சம் :
ஏகாம்பரேஸ்வரர் கோயில், பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்று. இத்தலம் பஞ்சபூதங்களில் ஒன்றான நிலத்தை குறிக்கின்றது. கோயிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலின் தல விருட்சம் எனப் போற்றப்படும் மா மரத்தின் வயது 1000 ஆண்டுகளுக்கு மேல் எனக் கூறப்படுகிறது. இந்த மாமரத்தின்கீழ் உமையாள் தவம் செய்ததாகவும், இந்த மரத்தில் விளையும் மாம்பழங்கள் நான்கு வித சுவைகள் கொண்டதாகவும் கூறப்படுகிறது. தினமும் ஆறுகால பூஜைகளும், ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி, போன்றவைகள் சிறப்புடன் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையும்
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் …
– தொகுப்பு : பிரீத்தி எஸ். –