வாகனங்களில் ஒட்டப்படும் ஒளிரும் ஸ்டிக்கர்களுக்கு நான்கு மடங்கு கூடுதல் கட்டணமா ? செங்குன்றம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை லாரி உரிமையாளர்கள் முற்றுகை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் எஃப் சி எனப்படும் வாகனங்களை இயக்குவதற்கான சான்று பெறும் வாகனங்களுக்கு விபத்துகளை தவிர்க்கும் வகையில் ஒட்டப்படும் ஒளிரும் ஸ்டிக்கர் விலை 900 ரூபாய் என இருந்தது. தற்போது அதைவிட நான்கு மடங்கு கூடுதலாக 4 ஆயிரத்து 900 ரூபாய் வசூலிக்கப் படுவதற்கு கண்டனம் தெரிவித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் 50 க்கும் மேற்பட்ட ஸ்டிக்கர் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ள நிலையில் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் ஸ்டிக்கர் கொள்முதல் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதன் மூலம், பெரும் முறைகேடு நடைபெறுவதாக அப்போது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.லாரி உரிமையாளர்களில் ஒருவரான வி.ஜி. ஜெயகுமார் இது குறித்து விரிவாகவே அப்போது பேசினார். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
– தேனீஸ்வரன் –