ஐ.பி.எஸ். அனூப் ஜெய்ஸ்வால் யார்? வியக்க வைக்கும் இன்னொரு பக்கம்!

“போலீஸ் என்றாலே முரட்டுத்தனம் கொண்டவர்கள், மனிதாபிமானமே இல்லாத கல் நெஞ்சுக்காரர்கள், அதிகாரம் என்னும் முகமூடி அணிந்து மிரட்டி பணம் பறிப்பவர் என்று பொது மக்களிடையே பொதுவாக ஒரு அபிப்பிராயம் இருந்து வருகிறது.

ரவுடிகள், கொள்ளையர்கள், இவர்களுடனான போராட்டத்திலேயே இவர்களது பதவிக் காலத்தின் பெரும்பகுதி கழிந்து விடுகிறது. பணத்தையும், நகைகளையும் பொதுமக்களிடமிருந்து லவுட்டிக்கொண்டு வரும் குற்றவாளிகளிடம் லட்டியால் பேசினால் மட்டுமே லட்சங்களை ரெக்கவரி செய்ய முடியும். காலம் முழுவதும் இவர்களோடு மல்லுக்கு நிற்பதாலும், உயரதிகாரிகளின் விரட்டுதலாலும், காலப்போக்கில் இறுகிப்போய் முரட்டுத்தனம், இவர்களது முகத்தில் தன் முத்திரையை பதித்துவிடும்.

கொலைகள், தற்கொலைகள், வெட்டு, குத்து, கலவரம், காயங்கள், ரத்தம் இவற்றோடே இவர்கள் வாழ்க்கை வாடிக்கையாய்ப் போய் விடுவதால், அன்பும், கருணையும் அனுதாபங்களும் அறவே காணாமல் போய்விடும் இவர்களிடம். சென்டிமென்ட் தாக்குதல் சிறிதளவும் இருக்காது இவர்களிடம். குறிப்பாக என்போர்ஸ்மென்ட்டில் இருப்பவர்களைக் காட்டிலும் க்ரைம் டிடெக்க்ஷனில் இருப்பவர்களின் இதயங்கள் ஈரமற்றவை. சூப்பர்வைசிங் கேடரில் இருக்கும் பெரும்பாலான உயரதிகாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல!

குறிப்பாக தென் மாவட்டங்களிலுள்ள அதிகாரிகளுக்கு ஆக்ரோஷம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஜாதிக்கலவரம், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி கும்பல்கள் போன்ற கேட்டகரி குற்றவாளிகளால் டென்ஷன் என்பது வாழ்நாள் முழுவதும் வாடிக்கையாய் போய்விடும் அதிகாரிகளுக்கு.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் போஸ்டிங் ஏற்றாலே எந்த எஸ்.பி.க்கும் வயிற்றை கலக்கும். Nightmare of the SPs என்று நடுங்க வைக்கும் பெயருண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு. ஆனால் அப்பேற்பட்ட அலற வைக்கும் இம்மாவட்டத்திற்கு அனூப் ஜெய்ஸ்வால் என்னும் அதிகாரி முதல் முதலாக அனுப்பி வைக்கப்பட்டார். மிரள வைக்கும் இம்மாவட்டத்தின் முதல் எஸ்.பி. என்ற பெருமைக்குரியவர் அனூப்.

. அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே என்று தூத்துக்குடி மாவட்டமே துயரத்திலிருந்து மீண்டது.
பதட்டம், பரபரப்பு, கோபம், எரிந்து விழுதல், பைல்களை வீசியெறிதல், ஓப்பன் மைக்கில் விளாசுதல், புறம் பேசுதல், கீழுள்ளவர்களை தண்டித்தல், குறை காணல், போட்டி, பொறாமை என சராசரி ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் காணப்படும் அற்ப குணங்களின் தாக்கத்தை அறவே காண முடியாது அனூப் ஜெய்ஸ்வாலிடம்.

ஒருவருக்கும் கெடுதல் நினைக்காத ஓர் உன்னதமான மாமனிதர் இவர். மிகமிக சாந்தமானவர். எளிமையின் மறு உருவம். மிகச்சிறந்த பேச்சாளர். எதிரிலிருப்பவர்களின் உணர்வுகளை எளிதில் கிரகித்து விடுவார்.
தூத்துக்குடியில் 3 வருடங்களை முழுமையாகக் கழித்த முதல் ஐ.பி.எஸ். அதிகாரி அனூப் மட்டுமே.

தூத்துக்குடி மிகமிக சென்சிடிவான மாவட்டம். மதக்கலவரம் (Communal) என்ற பூகம்பம் கதி கலக்கிவிடும் அதிகாரிகளை. கொடியங்குளம் கலவரத்தை காலத்துக்கும் மறக்க முடியாது. தாக்குப் பிடிக்க முடியாமல் சுனில் குமார் சிங் தத்தளித்து விட்டார். 1995 புத்தாண்டு துவக்கத்தில் மட்டகடை பகுதியில் ஒயின் ஷாப்பில் ஏற்பட்ட சிறிய கைகலப்பு, அண்ணாச்சிகளுக்கும், மீனவ மக்களுக்கும் மோதலை ஏற்படுத்தி கலவரமானது தூத்துக்குடி.

காவல்துறை ஒருதலை பட்சமாக நடந்து கொண்டதாக, மீனவ மக்கள் ஓரணியில் திரண்டனர். மாதா கோயில் மணி அடிக்கப்பட்டது. தீக்கிரையாக்கப்பட்டன கடைகளும், வீடுகளும். மீட்புப் பணிக்கு விரைந்த தீயணைப்பு வாகனத்தை கடத்திச் சென்று விட்டனர். அன்றைய எஸ்.பி.குணசீலனை குறிவைத்து சுற்றி வளைத்தது மீனவ கும்பல்.
அதிரடியில் செயல்பட்ட குணசீலனின் பாதுகாப்பு காவலர் (Gun Man) யாருடைய அனுமதியும் பெறாமல் 2 கலவரக்காரர்களை சுட்டுத் தள்ளியதும் சிதறி ஓடியது கும்பல்.

நமது சமூகத்திற்கு அரசியல் பின்பலம் இல்லாததே, நாம் தாக்கப்படுவதற்கு காரணம் என்று நினைத்த மீனவ மக்கள் தேர்தலில் தி.மு.க.வின் பெரியசாமிக்கு எதிராக ரோசக் பெர்ணான்டா என்பவரை நிறுத்தினர்.
தேர்தல் முடிவு மீனவ மக்களுக்கு சாதகமாக அமையாமல் போனது. ஓட்டு எண்ணிக்கையின்போதே கலவரம் வெடித்தது.- வரலாறு காணாத கலவரம்.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் கைதேர்ந்த அதிகாரி அனூப் ஜெய்ஸ்வால். தன் அதிரடி நடவடிக்கைகளாலோ, படை பலத்தாலோ தூத்துக்குடியில் சட்டம், ஒழுங்கை சீர்தூக்கி நிறுத்தவில்லை அனூப். சென்டிமென்ட்டான அணுகுமுறை, அன்பு, அரவணைப்பு, கருணை மழை இவைகளே ஐ.பி.சி.க்கு இணையான செக்க்ஷன்களாக அக்யூஸ்ட்டுகளின் மனமாற்றத்திற்கு தேவைப்பட்டது.

எப்பேர்ப்பட்ட கேட்டகரியிலுள்ள ரவுடிகளானாலும் சரி, அனூப் ஜெய்ஸ்வால் கூப்பிட்டனுப்பினால் போதும் ஐந்தே நிமிடத்தில் ‘ஐயா’ என்று எதிரில் வந்து கை கட்டி நிற்பான்.
நாம் சமீபத்தில் தூத்துக்குடியை வலம் வந்தபோது 33 வருட கதைகளைக் கொட்டி தீர்த்தனர் சில எக்ஸ் தாதாக்கள்.

வர்கீஸ் !

வர்கீஸ் என்பவன் மிகப்பெரிய தாதா. இவனது காதல் திருமணம், காலையில் நடைபெற உள்ளது. டவுன் டி.எஸ்.பி., வர்கீசை என்கவுன்ட்டர் லிஸ்ட்டில் சேர்த்து அனைத்து பார்மாலிட்டிகளையும் முடித்து தயாராக காத்திருந்தார். விஷயம், ஸ்பெஷல் பிரான்ச்சில் உள்ள தன் விசுவாசி மூலம் தெரிந்து கொண்ட வர்கீஸ், தடாலடியாக அனூப் ஜெய்ஸ்வாலின் கால்களில் விழுந்து கதறினான்.

எல்லாம் கை மீறிப்போன நிலையிலும் டவுன் டி.எஸ்.பி.யை தொடர்பு கொண்டு நடவடிக்கையை தள்ளிப்போடச் சொன்னார் அனூப்.
நன்றி பெருக்கால் ஐயா, “காலையில நீங்க வந்து தாலிய எடுத்துக் கொடுத்தாத்தான், நான் கட்டுவேன்” என்று மீண்டும் காலில் விழுந்து கதறினான். பயங்கர தாதா தேம்பியழுவதைக் கண்ட எஸ்.பி. காலையில் கல்யாண வீட்டுக்கு போலீஸ் சீருடையில் செல்ல, ஊரே திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தது.

மாப்பிள்ளை வீட்டார் கொடுத்த பட்டு வேட்டியையும், சட்டையையும் அணிந்து கொண்ட எஸ்.பி., தாலியை எடுத்துக் கொடுக்க, வந்திருந்த பெருங்கூட்டம் வாயடைத்துப் போய் நின்றது. தாதாவின் குடும்பத்தில் ஒருவராகிப் போனார் எஸ்.பி.! அன்றே அடாவடித்தனங்களை விட்டு, அகிம்சாவாதியாக விழுந்து போனானான் வர்கீஸ். வர்கீசின் ஹிஸ்டரி ஷீட் என்றோ கிழிக்கப்பட்டு விட்டது. அன்பினால் சாதிக்க முடியாதது எது?

சுதந்திர பாலன் !

பிரபல கொள்ளையன் (House Breaking Specialist). அவனது அட்டகாசத்தால் தூத்துக்குடி மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாது. கதவுக்கு எத்தனை பூட்டுகள் போட்டாலும் படாரென்று திறந்து, சவரன்களை மூட்டை கட்டிச் சென்று விடுவான். திருந்தும் வழி தெரியவில்லை. தொடர்ச்சியாக சிறையிலடைக்கப்பட்டான்.

வருந்தினான். காதல் மனைவி அனாதையாகி நோய்வாய்ப்பட்டு துடித்தாள். அனூப் ஜெய்ஸ்வால் டெல்லியிலுள்ள புலனாய்வு துறைக்கு மாற்றப்பட்டார். செய்த தவறுகளை உணர்ந்து கண்ணீர் மல்க அனூப் ஜெய்ஸ்வாலுக்கு ஓர் கடிதம் எழுதினான். தன் அன்பு மனைவியின் உயிரைக் காப்பாற்றும்படி கதறினான் கடிதத்தில்.

நாட்டின் மிகமிக, சென்சிடிவான உளவுத்துறையின் உயர் பதவியில் இருந்தபோதும் கைதியின் கடிதத்தில் நெகிழ்ந்து போய் தூத்துக்குடியிலுள்ள பிரபலமான மருத்துவமனையின் இயக்குனராக இருக்கும் தன் நண்பரான டாக்டர் ரவீந்திரனை தொடர்பு கொண்டு கைதியின் மனைவிக்கு சிகிச்சை அளித்து உதவுமாறு கோரியிருக்கிறார்.

அடுத்த சிலமணி நேரங்களிலேயே அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கைதியின் மனைவிக்கு மிகச் சிறந்த மருத்துவ சேவை அளிக்கப்பட்டது. உடல்நிலை முற்றிலும் தேறியது. விடுதலையாகி வெளியில் வந்த கைதியின் மெய் சிலிர்த்துப் போனது விவரங்களை அறிந்து.
ஐ.பி.சி. 380 (திருட்டு வழக்கு) அத்தோடு விடை பெற்றது அவனிடமிருந்து. சுதந்திரத்தோடு வாழத் தொடங்கினான் சுதந்திர பாலன். ஜெய்ஸ்வாலை குல தெய்வமாய் கும்பிடத் தொடங்கினான் மனந்திருந்திய குற்றவாளி.

முருகன் !

கள்ளச்சாராயத்திற்கு இணையான போதைதரக்கூடியது ஜின்ஜர் என்னும் நாட்டு சரக்கு. அதை தயாரித்து, விற்பனை செய்வதில் தன்னிகரில்லாதவன் முருகனும், அவனது மகனும் (Distilation and Marketing). Boot Legger என்று முத்திரை குத்தி முருகனை போட்டு தள்ளிக்கொண்டே இருந்தனர் ப்ரொஹிபிஷன் என்ஃபோர்ஸ்மென்ட் போலீசார்.

எஸ்.பி.யின் முன் நிறுத்தப்பட்டான். என்ன மாயம் செய்தாரோ அனூப் ஜெய்ஸ்வால், அடுத்த சில நாட்களில் அடுப்புகள் அனைத்தையும் அவனே உடைத்தெறிந்த அதிசயம் நடந்தது. கௌரவமான ஒரு தொழிலை கொடுத்து அவனது புனர்வாழ்விற்கு பாதை அமைத்துக் கொடுத்த புண்ணியவானின் பெருமைகளை பொழுதுக்கும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் முன்னாள் கள்ளச்சாராய தாதாக்கள் (Ex-Boot Leggers).

கிரிஸ்டோபர் !

கந்து வட்டி தொழிலால் முத்து நகரையே கதி கலக்கியவன். ஐ.டி. ரெய்டில் சிக்கி நாதியற்று நடுத்தெருவில் நின்றது குடும்பம். துணையிருந்த தாதாக்கள் தலைமறைவானார்கள். கருணைக் கடலே! கண் திறவாயோ! என்று எஸ்.பி.யின் கால்களில் விழுந்தான். கந்து வட்டி வசூலித்தவனுக்கு தொழில் நடத்த வட்டியில்லா கடன் கொடுத்து அவன் தலையெழுத்தையே மாற்றி எழுதிய மாமனிதன் இந்த எஸ்.பி.!

பெரியசாமி !

முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. அரசு நிலங்களை அபகரிப்பதில் அசகாய சூரன் (Land Grabbing). ஆளுங்கட்சிக்காரர் என்பதால் வாய் திறக்கவே தயங்கினர் மக்கள். ஸ்பெஷல் ப்ரான்ச் அதிகாரிகள் பெரியசாமியின் கிரிமினல் ஆக்ட்டிவிட்டிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு நிலையில் இவருக்கு குண்டர் தடை சட்டத்தை தயார் செய்து கொண்டிருந்தார்கள். இறுதி வாய்ப்பை கொடுத்தார் எஸ்.பி.

கையெழுத்து போட்டு கலெக்டருக்கு சிபாரிசு பண்ண 5 நிமிஷம் போதும். கட்சிக்காரன் இந்த மாதிரி காரியத்துல ஈடுபடலாமா? உங்கள் கட்சியில இருந்தே எனக்கு ப்ரஷர் வந்துகிட்டு இருக்கு. கடைசியா ஒரு வாய்ப்பு தரேன். எல்லாத்தையும் விட்டுடு! கௌரவமா வாழற வழியப்பாரு! என்ற எஸ்.பி.யின் அன்பின் அரவணைப்பில் நெகிழ்ந்து போய் கால்களில் விழுந்து விட்டாராம் பெரியசாமி.

பின்னாளில் அவரது மகள் கீதா ஜீவன் மாநில மந்திரியாய் பதவியேற்றபோதும், பொது விழாக்களில் அனூப்பை காணும்போது, சட்டென அவரது கால்களில் விழுந்து விடுவாராம் அமைச்சரின் தந்தை. “என்னப்பா இது? நீ அமைச்சரின்அப்பாவாச்சே இப்படி செய்யலாமா? என்று அன்புடன் கடிந்துகொள்வாராம் அனூப்.
தூத்துக்குடி மக்கள் மலரும் நினைவுகளை மணிக்கணக்கில் நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது, அந்த அன்பின் முகவரியைத்தேடி மாநகரில் அலைந்தோம்.

காவல் துறையிலிருந்து பிரியா விடைபெற்ற பின் கற்பிக்கும் தொழிலில் (Faculty) கடுமையான ஈடுபாட்டை காட்டிக்கொண்டிருக்கிறார் அனூப். அன்று முதல்வராக இருந்த ஜெயலலிதா தன் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர் டி.ஜி.பி.யாக விடை பெற்ற போதும், காவல் துறையில் இறுதியாக அளிக்கப்படும் அந்த உயரிய கவுரவத்தைகூட (Ceremonial Parade) அனூப் ஜெய்ஸ்வாலுக்குக் கொடுக்கவில்லை. முன்னாள் முதல்வரின் வறட்டுப் பிடிவாதம் சக சீனியர் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. பதவி சுகத்திற்காக சி.எம்.களுக்கு தன் வாழ்நாளில் சலாம் போடாத சத்தியசீலன் அனூப்…

(கட்டுரையாளர் : சீனியர் ஜர்னலிஸ்ட் இந்திரகாந்த்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *