தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அண்ணாவால் தொடங்கப்பட்டது, அதே தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் லாட்டரிக்கு மூடுவிழா நடத்தப்பட்டது, தமிழ்நாடு லாட்டரிச்சீட்டின் ஒன் லைன் வரலாறு இவ்வளவுதான் ஒரு பக்கக் கதவு- லீகல், இன்னொரு பக்க கதவு இல்லீகல். தமிழ்நாட்டில் இல்லீகலான இன்னொரு பக்கக் கதவு, லாட்டரியை ஒழித்து விட்டோம் என்று அறிவித்த நாளிலிருந்தே திறந்துதான் கிடக்கிறது. ஜெயலலிதா, மீண்டும் ஜெயலலிதா, ஓபிஎஸ் மீண்டும் ஓபிஎஸ், பின்னர் ஈபிஎஸ் அதன் பின்னர் ஸ்டாலின் (2022) வரையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்கள் மாறி மாறி வந்தார்கள், போனார்கள், இன்னொரு கதவு வழியாக நுழைந்த கள்ளத்தன லாட்டரி மட்டும் போகவில்லை. வெவ்வேறு மாநிலங்களில் அமலில் இருக்கும் லாட்டரிச் சீட்டுகளுக்கு தமிழ்நாட்டில் ரிசல்ட் சொல்லி பரிசு பிரிக்கும் ஏஜென்ட்டுகள் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் கோடீஸ்வர வாழ்க்கை வாழ்கிறார்கள். லாட்டரிச் சீட்டின் வடிவமும், பரிசுத்தொகையும், குலுக்கலும்தான் வேறு வண்ணத்தை பூசிக் கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் அனுமதிக்கப்படாத லாட்டரி குலுக்கல் ரிசல்ட்டை எதிர்நோக்கி வீதிக்கு நூறு பேர் காத்திருக்கிறார்கள், யாவரும் அன்றாடக் கூலிகள் என்பதே இதில் வேதனை… லாட்டரிச் சீட்டில் பல வகைகள் வந்து விட்டன. கடைக்குப் போய் சீட்டை வாங்கி அதை பாதுகாத்து பரிசு விழுந்ததும் வங்கி மேனேஜரை தேடி ஓடுவது ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் இருந்தது. இப்போது, மேகாலயா, மணிப்பூர், மகாராஷ்ட்ரா, சிக்கிம், அசாம், நாகாலந்து, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், மிசோராம், பஞ்சாப், கோவா, அருணாசல பிரதேசம் உள்ளிட்ட. பதினைந்து மாநிலங்களில் லாட்டரிச்சீட்டு விற்பனையை மாநில அரசுகளே நடத்துவதால் கள்ளத்தன லாட்டரிகள் அங்கே இல்லை! பிற மாநிலங்களுக்குப் போய் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து அதை தமிழ்நாட்டில் கூடுதல் விலை (கமிஷன்) வைத்து விற்பது ஒரு வகை வணிகம். இன்னொன்று வெற்றுச் சீட்டில் லாட்டரி எண்களை மட்டும் எழுதிக் கொடுத்து லாட்டரி நடத்தும் மாநிலங்களில் சொல்லும் குலுக்கல் ரிசல்ட்டை இங்கிருந்தபடி சொல்வது. இந்த வகைக்கு தனி கமிஷன் போகிறது. லாட்டரிச்சீட்டு விற்கும் பிற மாநிலங்களில் கிடைக்கும் ஆண்டு வருமானம் 1500 கோடி என்றால், அதில் 500 கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களின் பணம்தான் முதலீடு எனலாம்.
கர்நாடகாவில் ஒட்டுமொத்த அரசே லாட்டரி சூதாட்டத்தால் கவிழ்கிற நிலைமை ஏற்பட்டு (முதல்வர் சித்தராமையா -2007- முதல் லாட்டரி தடை) லாட்டரி சூதாட்ட குரூப்பை மொத்தமாக ஒழித்துக்கட்ட இரண்டாயிரம் ஸ்பெஷல் போலீஸ் டீமை நேரடி மேற்பார்வையில் சி.எம். சித்தராமையா இயக்கும் அளவு போனது… இருப்பினும் முழுமையான வெற்றி அவருக்கு கிடைக்க வில்லை.
பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தான் மிச்சம். விஆர்எஸ் கொடுத்து விட்டு ஏழு ஐபிஎஸ்கள் வீட்டுக்கேப் போய்விட்டனர். வழக்கு விசாரணை சிபிஐக்குப் போனது… ஆந்திராவின் குலுக்கல் ரெட்டிகாரு எனப்படும் வெங்கடேசுவர ரெட்டி, கர்நாடகாவின் சுபைர், கேரளாவின் இடுக்கி ஜோஸ்வா போன்றோர் இதில் சற்றேறக்குறைய இருபது ஆண்டுகளாக டாப் லிஸ்ட் மாஃபியாக்கள் என்று சொல்லி, போலீஸ் ஏரியாவே மிரள்கிறது.
சண்டே – குட் வியூ, ஃப்வர் பால், மண்டே- குவாலியர், லோட்டோ, டியூஸ் டே – மூன், ஸ்டார், வின், வெட்னஸ் டே – கோஸ்மோ, காருண்யா, தேர்ஸ்டே – லக் ஷா, அக்ஷயா, ஃப்ரைடே- லவ்லீ, தனஶ்ரீ, சர்ட்டர்டே – மோனிஷா, பிரதிக்ஷா என்று வாரத்தின் அத்தனை நாட்களிலும் லாட்டரிகள் குலுக்கப்படுகிறது. விஸூ, பூஜா, மான்சூன், எக்ஸ்-மேஸ், திருவோணம், பவுர்ணமி என்ற பெயர்களில் சிறப்பு லாட்டரிகள் விசேஷ நாட்களில் குலுக்கப்படுகிறது.
ஆர்.கே.பி. 143524 என்ற நம்பருக்கு முதல் பரிசு பத்து லட்சம் என கேரளாவில் பரிசு விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். இங்கேயும் அதேதான் பரிசு, அதாவது கடைசியாக உள்ள மூன்று நம்பருக்கு இங்கே ஆட்டத்தை வைக்கிறார்கள். 524 என்ற நம்பரை இங்கே வைத்திருப்பவருக்கு 30 ஆயிரம் ரூபாய் பரிசு, இது மூன்று நம்பர் ஆட்டம். ஒரு நம்பருக்கு 100 ரூபாய் கட்டணம். 300 ரூபாய் டிக்கெட்டுக்கு ரூ. 30 ஆயிரம் பரிசு.
ஒரு நம்பர் ஆட்டக்காரர்கள் கடைசி எண் 4-ஐ வைத்திருந்தால் ஆயிரம் ரூபாய் பரிசு. சீட்டின் விலை 100 ரூபாய். மார்னிங், மேட்னி, ஈவ்னிங், நைட், மிட் நைட் ஷோக்கள் (குலுக்கலின் பெயர்) நடக்கிறது. பகல் 12 மணியளவில் குலுக்கி 12.30. க்கு ரிசல்ட் வந்து விடும். ஒவ்வொரு நாளும் ஐந்து குலுக்கல் நடக்கிறது.
தமிழ்நாட்டு லாட்டரி ஏஜென்டிடம் வின்னிங் டிக்கெட் நம்பரைச் சொல்வார்கள். அந்த ஏஜென்ட், ஏரியாவில் உள்ள துணை ஏஜெண்டுகளுக்கு அதை சொல்வார். லோக்கல் ஏஜென்ட்டின் அடையாளக் குறியீடு கொண்ட பரிசுச் சீட்டின் நம்பரை வைத்திருக்கும் ஆசாமிக்கு தேடிப்போய் பணம் சேர்ந்து விடும், உள்ளூர் ஏஜெண்ட் அதை செய்து விடுவார். லோக்கல் ஏஜெண்ட்டுகளுக்கு தினக்கூலி ஆயிரம் ரூபாயை மெயின் ஏஜெண்டுகள் கொடுத்து விடுவார்கள். தமிழ்நாட்டில் உள்ளூர் ஏஜெண்ட்டுகள் தொகுதிக்கு நான்கு பேர் இருப்பதாக சொல்லப் படுகிறது. வெள்ளை பேப்பரில் பரிசுச் சீட்டின் 1,2,3 என நம்பர்களை குறித்துக் கொடுத்து கீழே ஒரு கிறுக்கல் கையெழுத்து இருக்கும்… தேதி, எந்த ஷோ குலுக்கல் என்ற மொத்த விபரமும் அதில் இருக்கும்.
பரிசுத்தொகையோடு லோக்கல் ஏஜெண்ட் ஓடிப்போய் விட்டாலும் கவலையில்லை – மெயின் ஏஜெண்ட் ஒரே போனில் செட்டில் செய்துவிடுவார்… நெட்வொர்க் அப்படியானது. சற்றேர ஆண்டுக்கு ஏழாயிரம் கோடி ரூபாயை மாநில அரசுக்கு வருவாயாக லாட்டரியால் கொடுக்க முடியும் – அதாவது தமிழ்நாடு அரசாங்கமே ஏற்று நடத்தினால்… லாட்டரியால் பல குடும்பங்கள் தெருவுக்கு வந்து விடக்கூடாது என்றுதான் லாட்டரிக்கு தடையே விதிக்கப் பட்டது என்று பதில் இருக்குமானால் – கள்ளத்தன லாட்டரியின், சுரண்டல் லாட்டரியின் வருமானம் அரசாங்கத்துக்கா போகிறது? கள்ளச்சாராயம் – அரசின் டாஸ்மாக் சாராயம் போலத்தானே இதுவும்? லாட்டரி ரெய்டு, தனிப்படை, சிறப்புப் படை என்று எத்தனை எத்தனை படைகள் அப்பப்பா… இரண்டு விஷயம் : கள்ளத்தன லாட்டரி, சுரண்டல் லாட்டரிச் சீட்டுகளை தமிழ்நாடு அரசு முற்றாய் ஒழிக்க வேண்டும் அல்லது அதை அரசாங்கமே ஏற்று நடத்தி லாபத்தை கஜானாவுக்கு திருப்ப வேண்டும்…
-ந.பா.சேதுராமன் –