செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. விவசாயி. கடந்த ஆண்டு (2021) செங்கல்பட்டில் தன் உறவினர் வீட்டில் இறுதி சடங்கிற்கு சென்றபோது எல்லப்பன் என்பவர் மதுபோதையில் அண்ணாதுரையிடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இறுதி சடங்குகள் முடிந்த பின்பு அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் எல்லப்பனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். எல்லப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிக்க காரணம் அண்ணாதுரை தான் என எல்லப்பன் உறவினர்கள் குற்றம்சாட்டி கிராமப் பஞ்சாயத்தை கூட்டினர். பஞ்சாயத்தார் தீர்பின் முடிவில், நஷ்ட ஈடாக அண்ணாதுரை, ரூபாய் 30 லட்சம் தரவேண்டும் என கூறியுள்ளனர். அண்ணாதுரை வேறு வழி தெரியாமல் அதற்கு ஒப்புக் கொண்டு கடந்த ஆண்டு (2021) மார்ச் மாதம் முதல் தவணையாக 10 லட்சம் ரூபாயும் மறுபடியும் ஆறாம் தேதி, இரண்டரை லட்ச ரூபாயும் கொடுத்துள்ளார். மீதி தொகையை ஒரு சில தவணைகளில் கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்ளாத பஞ்சாயத்தார் மீதித்தொகை தரும்வரை அண்ணாதுரை மற்றும் அவர் குடும்பத்தாரை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக தீர்ப்பு கூறியுள்ளனர். பஞ்சாயத்து தீர்ப்பால் அண்ணாதுரை அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த அண்ணாதுரை கடந்த 9ஆம் தேதி வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையினால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். புகாரின் பேரில் சித்தாமூர் போலீசார் அண்ணாதுரை இறப்பு குறித்து விசாரணை நடத்தினர்.
சித்தாமூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கிராம பஞ்சாயத்தார் அளித்த தீர்ப்பின்படி நஷ்ட ஈடு வழங்க முடியாமல் போனதும், ஊரை விட்டு கிராமத்து பஞ்சாயத்தார் அண்ணாதுரை குடும்பத்தை தள்ளி வைத்ததும் தெரிய வந்துள்ளது. நாட்டாமை தீர்ப்பளித்த மரத்தடி தீர்ப்பாளர்கள் குறித்து விசாரிக்கப்படும் என போலீசார் தரப்பில் கூறுகின்றனர். கிராமங்களில் மற்றும் புறநகர்களில் நடக்கிற மரத்தடி பஞ்சாயத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்று உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதை இங்கே சுட்டிக்காட்டுவது அவசியம். எல்லப்பனும் அண்ணா துரையும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த பஞ்சாயத்துகளும் பரிதாப மரணங்களும் செங்கல்பட்டை தாண்டி வெளியே பெரிதாக வெடிக்கவில்லை.
– பிரீத்தி எஸ்.